
நமது கலாச்சாரத்துக்கும் சாஸ்திர ஸம்ப்ரதாயங்களுக்கும் அடிப்படை நம்பிக்கை தான், அந்த நம்பிக்கை என்பது அறிவு சார்ந்ததாக அமைந்துள்ளது, நமது இந்திரியங்களுக்கு புலப்படாத புண்யம் பாபம் தெய்வம் தர்மம் அதர்மம் ஸ்வர்கம் நரகம் பரலோகம் போன்ற பற்பல விஷயங்களை, தனது தவ வலிமையால் உணர்ந்த மஹர்ஷிகள் யோகிகள் ஸித்தர்கள், நமக்குஉணர்த்துகிறார்கள்,
அவர்களின் சுயநலமற்ற இந்தச் செயலை புரிந்து கொண்டு, அவர்களது வார்த்தைகளை அப்படியே நம்பி நாமும் ஏற்றுக்கொள்கிறோம், இந்த நம்பிக்கைதான் நமது மதத்துக்கு நமது ஆன்மிகப் பயணத்துக்கு அடிப்படையாக அமைகிறது, ஆகவேதான் நமது பழக்க வழக்கங்களை அறிவியல் காரணங்களைக் கொண்டு ஆராயாமல் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே பலகாலமாக நாம் அனுஷ்டித்து வருகிறோம்,
பலர் நமது சாஸ்திர ஸம்பிரதாயங்களுக்கு விக்ஞான ரீதியான காரணங்களைக் கேட்கிறார்கள், மெய்ஞானத்தை விக்ஞானத்தைக்கொண்டு ஆராய்வதில் ப்ரயோஜனமில்லை, ஆனாலும் முதன் முதலில் நமது ஸம்ப்ரதாயங்களை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இது உதவியாக இருக்குமே என்பதற்காக நமது அறிவுக்குத்தக்கவாறு சிற்சில காரணங்களைக் கூறிவருகிறோம், இது ஒரு சிலருக்கு நமது ஸம்ப்ரதாயத்திலுள்ள அவநம்பிக்கையை போக்கவும் உதவலாம்,
ஆனால் ஒரு சிலர் வெறும் நம்பிக்கையை மட்டும் அடிப்படையாகக்கொண்டு செய்யப்படும் செயல்கள் நீடிக்காது என்கிறார்கள், இது தவறு, உலக ஸ்ருஷ்டி முதல் வேதம் சாஸ்திரம் மஹர்ஷிகளின் வாக்கு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே நமது கலாசாரம் வளர்ந்து வருகிறது, முன்னோக்கிச் செல்கிறது, அறிவை அடிப்படையாகக்கொண்டு செயல்படும் (விக்ஞானிகள்) பலரும் தெய்வ நம்பிக்கையுடனேயே இருக்கிறார்கள், ஏன் தெய்வத்தையே முழுமையாக நம்புகிறார்கள் என்பதே இன்றைய சூழ்நிலை.
நம்பிக்கை அடிப்படையிலான நமது ஹிந்து மதத்துக்கு, கலாசாரத்துக்கு, சாஸ்திர ஸம்பிரதாயங்களுக்கு, தற்சமயம் அரசாங்க ரீதியில் ஓர் அங்கீகாரம் கிடைத்துள்ளது, ஆம், அயோத்தியில் ராமஜன்ம பூமி விஷயத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்புதான் அது,
அகழ்வாராய்ச்சிகள் தஸ்தாவேஜுகள் முதலியவற்றை பரிசீலித்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், ராமர் பிறந்த இடம் இது என்னும் லக்ஷோபலக்ஷம் மக்களின் நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு, அவர்களின் நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டு, இந்தத் தீர்ப்பு வழங்கப்படுகிறது என்று தீர்ப்பில் நீதியரசர்கள் கூறியிருக்கிறார்கள், தீர்ப்பின் விபரங்களை ஆராயாமல் அதன் ஒரு பகுதியான நம்பிக்கை அடிப்படையிலான இந்தத்தீர்ப்பு என்னும் வாசகத்தை மட்டும் நாம் பார்க்கலாம், நமது தேசம் ஸுதந்திரம் அடைந்தது முதல் ஏராளமான தீர்ப்புகள் வெளியிடப்பட்டிருந்தாலும் நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டு வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு இதுவாகத்தான் இருக்க முடியும், அறிவுசார்ந்த ரீதியில் செயல்படும் நீதியரசர்கள், ஸுமார் 60 ஆண்டு காலமாக பல விபரங்களை ஆராய்ந்து, நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு என்னும் வாசகத்துடன் வழங்கிய இந்தத் தீர்ப்பு அரசாங்கம் மற்றும் அறிவு சார்ந்த ஸமுதாயம் சார்பாகக் கூறப்பட்ட கருத்தாகவே கொள்ளவேண்டும்,
நமது கலாசாரத்துக்கும் மற்றும் ஒவ்வொரு மதத்திலும் பின்பற்றப்படும் நம்பிக்கை அடிப்படையிலான பற்பல செயல்களுக்கும், இநதத் தீர்ப்பு வருங்காலத்தில் மிகப்பெரும் துணையாக இருக்கும் என்கிறார்கள் படித்த பெரியோர்கள், ஆகவே ஒவ்வொரு மதத்திலும் காணப்படும் நம்பிக்கை அடிப்படையிலான செயல்களை ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், மற்றவரின் மத ரீதியான நம்பிக்கைகளுக்கு ஒவ்வொருவரும் மதிப்பளிக்க வேண்டும், அதற்கான விக்ஞான ரீதியானக் காரணங்கள் தற்சமயம் நமக்கு புலப்படாவிட்டாலும் கூட, நமது முன்னோர்கள் செய்து வந்த அனுஷ்டானங்களை பூஜை ஜப ஹோமங்கள் தர்ப்பணங்கள் ச்ராத்தங்கள் முதலானவற்றை நாமும் தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்யவேண்டும்,
விக்ஞான ரீதியான காரணங்கள் மாறினால் நமது செயல்களிலும் சுணக்கம் ஏற்படலாம், ஆகவே எதற்கும் ஏன்? எதற்கு? என்று விக்ஞான ரீதியில் காரணங்களை ஆராய்ந்த பின்பே செய்வது, என்று எண்ணாமல். நமது மத நம்பிக்கை இது. நமது சாஸ்திர ஸம்பிரதாயம் இது. என்று ஏற்றுக்கொண்டு அனுஷ்டானங்களை செய்ய ஆரம்பித்து விட்டு. பிறகு தேவை பட்டால் விக்ஞானரீதியான காரணங்களை புரிந்து கொண்டு, செய்யும் அனுஷ்டானங்களை உறுதிபடுத்திக் கொள்ளலாம், இதுவே நமது முன்னோர்கள் காண்பித்த நடைமுறை,
இவ்வாறு நாம் செய்யும் அனைத்து தெய்வ காரியங்களையும் அனுஷ்டானங்களையும்ச்ரத்தை, விஸ்வாசம், முழு நம்பிக்கையுடன் செய்து முழுமையான பலனையடையவும், மற்றவரின் நம்பிக்கையைஅவமதிக்காமல், மற்றவரின் (மற்ற மதத்தினரின்)நம்பிக்கைகளை யும் மதித்து நடந்துகொள்ளவும், பகவான் நமக்கு அனுக்ரஹிக்கட்டும்,