Let a Vedic priest enter your home every month

Let a Vedic Priest Enter Your Home Every Month

Search This Blog

Thursday, June 10, 2010

May 2010 ஆசிரியர் எண்ணங்கள் May 2010

இந்த மண்ணில் பிறக்கும்போது ஒவ்வொரு குழந்தையும் நல்லக்குழந்தையாகத்தான் பிறக்கிறது, அந்தக்குழந்தை நல்லவனாவதும் தீயவனாவதும் பெற்றோர் வளர்க்கும் விதத்தைப் பொருத்தது என்கிறார் ஒரு கவிஞர், இது உண்மை தான்,

ஆனாலும் நமது சாஸ்திரங்கள் இதையும் மீறி ஒரு விஷயத்தை உணர்த்துகிறது, அதாவது அந்தக் குழந்தை நல்லவனாக, தீயவனாக, உறுவாவது மண்ணில் பிறந்த பிறகு அல்ல, பிறப்பதற்கு முன்பாகவே அதாவது அந்தக் குழந்தை தனது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதே என்கின்றன சாஸ்திரங்கள்,


தாயின் கர்ப்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடையும் குழந்தை, தனக்கு வேண்டிய உணவை எவ்வாறு தாய் மூலம் பெற்றுக்கொள்கிறதோதாய் சாப்பிடும் சாப்பாட்டையே தானும் சாப்பிடுகிறதோஅவ்வாறே தாயின் ஒவ்வொரு இந்த்ரிய ஸுகத்தையும் தானும் அனுபவிக்கிறது, தாய் நுகரும் வாஸனை, தாயால் கேட்கப்படும் சொற்கள், தாயால் காணும் காக்ஷி, தாய் பேசும் பேச்சு, தாய் விடும் மூச்சு, முதலான தாயின் அனைத்து அம்சங்களுமே குழந்தையைச் சென்றடைகிறது,

குறிப்பாக தாய் காதால் கேட்கும் சொற்களும் அதனால் தாய்க்கு ஏற்படும் எண்ணங்களும் அந்தத் தாயையும் தாயின் கர்ப்பத்தில் வளரும் குழந்தையையும் சென்றடையும்,பாதிப்பை ஏற்படுத்தும்,


துஷ்டனான ஹிரண்யகசிபுவின் மகன் ப்ரஹ்லாதன், சிஷ்டனாக (நல்லவனாக) ஆனது எப்படி?, ப்ரஹ்லாதனுக்கு மட்டும் பிறக்கும் போதே தெய்வநம்பிக்கை ஏற்பட்டது எவ்வாறு? இதை பல முறை அவன் தந்தை ஹிரண்யகசிபுவும் குரு சண்டாமர்கர்களும் கேட்டபோதும் அதற்கான பதிலை விரிவாகத் தெரிவிக்காத பக்த ப்ரஹ்லாதன், தன்னுடன் கூட படிக்கும் மாணவர்கள் (இதே கேள்வியை) கேட்கும்போது மட்டும் உண்மையைக்கூறுகிறான்,

அதாவது தனது தந்தை ஹிரண்யகசிபு தவம் செய்ய காட்டிற்குச் சென்றிருந்த ஸமயம், தனது தாய் கயாது என்பவள் கருவுற்றிருந்தாள், இந்திரனின் துன்புறுத்தலுக்கு பயந்த தாய் கயாது அம்மாள், நாரதரை அடைக்கலம் அடைந்தாள், நாரதரும் தனது ஆசிரமத்திலேயே அடைக்கலம் தந்ததுடன், அடிக்கடி பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் பெருமைகளையும் குணங்களையும் கதைகளாக கயாது அம்மாளுக்குக் கூறிவந்தார்,

அந்த ஸமயம் தாயின் கர்ப்பத் திலிருந்த ப்ரஹ்லாதனாகிய நான் அவற்றைக்கேட்டுக் கொண்டிருந்தேன், அதுமுதல் எனக்கு பகவானிடம் தீவிர பக்தியும் நம்பிக்கையும் ஏற்பட்டது, அந்த ஸம்பவம் பகவானின் அருளால் இப்போதும் என் நினைவில் இருக்கிறது, தாயின் கர்ப்பதில் இருக்கும்போது நான் கேட்ட நல்லவிஷயங்களே என்னை நல்லவனாக மாற்றியது, என்கிறார் பக்த ப்ரஹ்லாத ஸ்வாமி,

உத்தரையின் கர்ப்பதிலிருந்த பரீக்ஷித்தை அஸ்வத்தாமாவின் ப்ருஹ்மா ஸ்த்ரத்திலிருந்து பகவான் தனது சக்ராயுதத்தால் ரக்ஷிக்க, கர்பத்திலிருந்த (பரீக்ஷித்) குழந்தை பகவானை ஸ்தோத்ரம் செய்ததாக ஸ்ரீ பாகவதம் கூறுகிறது,

தனது தாயார், தான் கருவுற்றிருக்கும்போது தினஸரி பஜனைப்பாடல்களை கேட்டுக் கொண்டிருந்ததால் தான், தனக்கும் தினஸரி (ரகுபதி ராகவ ராஜாராம்) பஜனை செய்ய வேண்டும் என்னும் எண்னம் தோன்றியதாக மஹாத்மா காந்தி தனது ஸத்ய சோதனையில் கூறுகிறார். இதைப்போல் பற்பல ஸம்பவங்கள்,

இதனால் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கும் கேட்கும் சக்தி, நினைக்கும் திறன் உண்டு என்பதையும் அதுவே அந்தக்குழந்தையை நல்லவனாகவோ தீயவனாகவோ உருவாக்குகிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம்,


தற்சமயம் நல்ல சப்தங்கள் காதில் விழுவதே அரிதாகி விட்டன, எங்கும் வாஹன இரைச்சல், டி.வி குக்கர் மிக்ஸி போன்ற யந்திரங்களின் சப்தங்கள், சண்டை சச்சரவுகளால் ஏற்படும் கொடுமையான சொற்கள், இப்படிப்பட்ட சப்தங்களிலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் தன்னை அப்புறப்படுத்திக்கொள்ள வேண்டும், இந்தக் கொடிய சப்தங்கள் தன்னை மட்டுமல்லாது தனது கருவில் வளரும் குழந்தையையும் பாதிக்கும் என்பதை உணர வேண்டும்,

தன் வயிற்றில் வளரும் குழந்தையை கருத்தில் கொண்டு உணவில் (பத்யமான) சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதைப் போல், செவிக்கு ஆஹாரமான சப்தங்களை கேட்பதிலும் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்,

கர்ப்பிணிப்பெண், தனக்குப்பிறக்கும் குழந்தை எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாளோ, கர்ப காலத்தில் அதற்குத்தக்க சூழ்நிலையில் அவள் வஸிக்க வேண்டும்,

குழந்தை ஸங்கீத மேதையாக உருவாக வேண்டும் என்று ஆசைப்பட்டால் அடிக்கடி சாஸ்த்ரீய ஸங்கீதத்தைப்பாடவோ அல்லது கேட்கவோ வேண்டும், வேத சப்தங்கள், இரைச்சலில்லாத நாமஸங்கீர்த்தனம், தர்மிஷ்டர்கள் மூலம் தர்ம ப்ரவசனங்கள், ஆகியவற்றை கேட்க வேண்டும் ,

கர்ப்பிணிப் பெண்கள் நமது கலாச்சாரத்துக்கும் சாஸ்திர ஸம்ப்ரதாயங்களுக்கும் உட்பட்ட சூழ்நிலையில் தன்னை இருத்திக்கொண்டு, கெட்ட சப்தங்களை விலக்கி நல்ல சப்தங்களை காதால் கேட்டுக்கொண்டு, தெய்வ நினைவோடு இருந்து கொண்டு, தெய்வ பக்தியுள்ள பெற்றோர் பெரியோர் ஆகியோர்களிடம் விநயமுள்ள புத்திசக்தி மேதா சக்தியுள்ளதேசபக்தியுள்ள தீர்காயுஸ்ஸான குழந்தைகளைப் பெற்று ஸுகமாக வாழ ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்.

No comments: