இன்பமாக வாழ்க்கையை நடத்த தெய்வ அனுக்ரஹம் கட்டாயம் தேவை என்பதை பலரும் உணர்ந்திருக்கிறார்கள், ஒவ்வொரு ஆஸ்திகர்களும் தன்வீட்டில் தனக்குப் பிடித்தமான தெய்வ விக்ரஹங்களை- படங்களை-வாங்கி வந்து வைத்து, தினஸரி சக்திக்குத் தக்கவாறு பூஜை செய்கிறார்கள், சக்தியுள்ள சிலர் தனது வீட்டில் பூஜையறை என்று ஓரிடம் ஒதுக்கி, அதில் தெய்வங்களின் படங்களை வைத்து பூஜிக்கிறார்கள், மற்றும் சிலர் வீட்டில் எங்கு இடமிருக்கிறதோ அங்கெல்லாம் தெய்வங்களின் படங்களை (சுவற்றில் மாட்டி) வைத்து வழிபடுகிறார்கள்,
உங்கள் வீட்டில் எத்தனை தெய்வ (ஸ்வாமி)ப் படங்கள் இருக்கின்றன? என்று ஒருவரைக்கேட்டால் ஸுமார் 15 முதல் 20 வரை இருக்கலாம் என்று பதில் வரும், அவ்வளவு படங்கள் எப்படி வீட்டிற்கு வந்தன? என்று மறுபடியும் கேட்டால், ஒவ்வொரு ஸந்தர்பங்களிலும் ஒவ்வொரு படங்களை நானாகவே சேர்த்துக்கொண்டேன், சிலவற்றை எனக்கு நெருக்கமானவர் தந்தார், என்றெல்லாம் பதில் வரும், அந்தப்படங்களை வீட்டில் எங்கெல்லாம் மாட்டி வைத்துள்ளீர்கள்? என்று கேட்டால், வீட்டு வாசலில் சில, வீட்டின் உள்ளே நுழையுமிடத்தில் சில, ஹாலில் சில, பெட் ரூமில் சில, சாப்பிடும் இடத்தில் சில, சமையல் ரூமில் சில,கொல்லையில் ண்ச்சில, மாடியில் சில, என்று அடுக்கிக்கொண்டே போவார்கள், ஆக எங்கும் நிறைந்திருக்கும் தெய்வம், தனது வீட்டிலும் எங்கும் பரவி படங்களாக சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்பதைச் சொல்லுவார் அவர். இதுதான் பலரது நிலை, இதில் மாற்றம் தேவை.
பெரிய மனிதர் ஒருவரின் எதிரில், நாம் கண்டகண்ட பேச்சுக்களைப் பேச மாட்டோம், கால்களைத் தொங்க விட்டுக்கொண்டோ நீட்டிக் கொண்டோ அமர மாட்டோம், மிகுந்த அடக்கத்துடன் நடந்து கொள்வோமல்லவா! நாம் ஒரு மனிதருக்குத் தரும் இந்த மரியாதையை நம் வீட்டில் படங்களாக காக்ஷிதரும் தெய்வங்களுக்கும் தர வேண்டாமா!
தெய்வங்கள் படங்களில் விக்ரஹங்களில் ஸான்னித்யமாக இருக்கும் போது அந்தப்படங்களின் எதிரில் நாம் நாற்காலி சோபா போன்ற வற்றில் கால்களைத் தொங்கப்போட்டுக்கொண்டு அமர்வதும் மற்றவரைப் பற்றிய குற்றங்களையும் நமது தற்பெருமைகளையும், என- பேசக்கூடாத (பொய்) பேச்சுக்களைப் பேசுவதும், சாப்பிடக்கூடாது என்று சாஸ்திரங்களில் நிஷேதிக்கபட்ட பொருட்களை சாப்பிடக்கூடாத அகாலங்களில் சாப்பிடுவதும், தவறல்லவா!, இவற்றை நாம் தவிர்க்க முயற்சிக்கலாமே!,
வீடு முழுவதும் தெய்வங்களின் படங்களை மாட்டி விட்டால் நாம் ஸுதந்திரமாக எங்கே நடமாடுவது? பேசுவது? சாப்பிடுவது? தூங்குவது? ஆகவேதான் வாஸ்து சாஸ்திரத்திலும் வீட்டில் பூஜையறை என்று ஒன்று அமைக்க வேண்டும் என்றும் அதில் தெய்வங்களை வைத்து பூஜிக்க வேண்டும், என்றும் கூறப்பட்டுள்ளது, ஆகவே நமது வீட்டில் எத்தனை தெய்வ விக்ரஹங்கள் படங்கள் இருக்கின்றனவோ, அத்தனையையும் ஒன்று சேர்த்து, பூஜை செய்யும் இடத்தில் (பூஜை யறையில்) வைத்துவிட வேண்டும்,அப்போதுதான் அனைத்துக்கும் ஒன்றாக இனைத்து பூஜைகள் நிவேதனங்கள் செய்ய ஸௌகரியமாக இருக்கும், இது காலண்டர் தானே!, இது அழகுக்கல்லவா மாடியிருக்கிறோம்? என்றெல்லாம் ஸமாதானம் சொல்லாமல் வீட்டிலுள்ள அனைத்து தெய்வப்படங்களையும் ஓரிடத்தில் சேர்த்து மாட்டலாம், மேலும் வீட்டில் அதிகமான அளவில் படங்களை விக்ரஹங்களை சேர்த்துக்கொள்ளாமல், படங்களின் விக்ரஹங்களின் எண்ணிக்கையையும் குறைத்துக் கொள்ளலாம். ஒரே தெய்வங்களின் ஒரேவிதமான பற்பல படங்களை வைத்துக் கொள்ளாமல் ஓரிறு படங்களை மட்டும் வைத்திருந்தால் போதும்,
ஆசார்யர்களின் படங்களையும் மஹான்களின் படங்களையும் தெற்கு நோக்கி மாட்ட வேண்டும், தெய்வங்களின் படங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி மாட்ட வேண்டும், மறைந்த முன்னோர்களின் படங்களை பூஜையறையில் மாட்டக்கூடாது போன்ற நியமங்களை கடைபிடிக்க வேண்டும், சிறிய அளவில் தெய்வ விக்ரஹங்கள் மற்றும் படங்களை வீட்டில் ஒரே இடத்தில் வைத்துக்கொண்டு தினந்தோறும் சிறிய அளவில் பூஜை செய்து வந்தாலே தெய்வ அருள் முழுமையாக நமக்குக் கிட்டும், குடும்பத்தில் நிம்மதி ஏற்படும், இதற்கு பகவான் அனுக்ரஹிக்கட்டும்.
No comments:
Post a Comment