ஒருவர் மிகப்பெரும் செல்வாக்குள்ளவர், அவர் மகிழ்ச்சியாக இருக்கும் ஸமயத்தில் யார் எதைக்கேட்டாலும் தரக்கூடிய சக்தி யுள்ளவர், அப்படிப்பட்டவரை மகிழ்வித்தல் எப்படி? அவருக்குப் பிடிக்கும் செயலைச் செய்தால் அவர் மகிழ்வார், அவருக்கு எந்தச் செயல் பிடிக்கும்? எதைச் செய்தால் அவர் ஸந்தோஷமடைவார்? இதைத்தான் நமது வேதங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன,
மனிதர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் பிடிக்கும், ஸூர்யனுக்கும், பித்ருக்களுக்கும் (மறைந்த முன்னோர்களுக்கும்) நமஸ்காரம் செய்வது பிடிக்கும், ப்ருஹ்ம தேவருக்கும் மஹர்ஷிகளுக்கும் வேதத்தைச் சொல்வது பிடிக்கும், அக்னி இந்திரன் முதலான தெய்வங்களுக்கு ஹோமம் செய்வது பிடிக்கும், ஸ்ரீ மஹாவிஷ்ணுவிற்கு நிறைய ஆடை ஆபரணங்களால் அலங்காரம் செய்வது பிடிக்கும், பரமேஸ்வரருக்கு பால் தயிர் தேன் முதலான பொருட்களால் அபிஷேகம் செய்வது பிடிக்கும், முருகப்பெருமானுக்கு ஷஷ்டி கிருத்திகை போன்ற நாட்களில் உபவாஸம் இருத்தல் பிடிக்கும், லக்ஷ்மி பார்வதி போன்ற பெண் தெய்வங்களுக்கு நன்நடைத்தையுள்ள (பதிவிரதா) பெண்களைக் கொண்டாடுவதும் பூஜிப்பதும் பிடிக்கும்,
அனைத்து கலைகளின் இருப்பிடமும், அனைத்து உயிர்களுக்கும் பேசும் திறமையை (வாக் சக்தியை)த் தருபவளும், ஜகத் ஸ்ருஷ்டி கர்த்தாவான ப்ருஹ்மபத்னியுமான ஸரஸ்வதி தேவிக்கு ஸத்யம் (உண்மை) பேசுவதே பிடிக்கும் என்று வேதம் தெரிவித்துக்கொண்டே செல்கிறது, ஆம் ஸரஸ்வதி தேவியால் வழங்கப்பட்ட வாக் சக்தியை (பேசும் திறமையை) ஸரியாகப் பயன்படுத்துவதே அதாவது ஸத்யம் பேசுவதே ஸரஸ்வதியை மகிழ்விக்கும் செயல்,
இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் பண்பட்ட மனதுடன் நல்லவனாக வாழ கல்வியறிவு மிகவும் அவசியம், இந்தக் கல்வியறிவை தெய்வ அருளால்தான், குறிப்பாக ஸரஸ்வதியின் அருளால்தான் பெற முடியும், கையில் வீணை புஸ்தகத்துடன் தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் ஸரஸ்வதி தேவியை பூஜிப்பதால் கலைகள், கல்வி செல்வம் வீரம் போன்ற அனைத்தையும் பெற முடியும். ஸரஸ்வதியை ஏராளமான தாமரை போன்ற மலர்களால் அர்சனை செய்வதும், பலவிதமான உணவு வகைகளால் நிவேதனம் செய்வதும், பற்பல (வேத) மந்திரங்கள் சொல்வதும் மிகச் சிறந்தததுதான், ஆனாலும் ஸரஸ்வதியை மகிழ்விக்க ஸரஸ்வதியின் அருளைப்பெற இதைவிட மிகச் சுலபமான வழி ஒன்று உள்ளது, அதுதான் ஸத்தியம் (உண்மை) பேசுதல்.
மனதில் ஏற்படும் எண்ணங்களை அப்படியே மாறாமல் தனது வாக்கால் (சொற்களால்) வெளிப்படுத்துவதே ஸத்யம் (உண்மை) பேசுதல் எனப்படும், ஸத்தியத்திற்கு இருக்கும் பெருமை கணக்கிலடங்காது,
எந்த ஒரு ஆபத்து காலத்திலும் ஸத்யத்தையே பேசுதல் என்னும் உறுதியான கொள்கையுடன் வாழ்ந்தார் தர்மாத்மா தர்மபுத்திரர், தனது பதவியையும் ஸுகத்தையும் மனைவியையும் இழந்தாலும் பொய்யே பேசமாட்டேன் என்று உறுதியுடன் காசி மாநகரத்தில் வாழ்ந்த சக்கிரவர்த்தி ஹரிஸ்சந்திரன் போன்றவர்கள் வாழ்ந்த நம் பாரத தேசத்தில்தான் நாமும் வாழ்கிறோம். கத்தியின்றி ரத்தமின்றி அஹிம்ஸை சத்தியம் என்னும் இரண்டால் மட்டுமே நம் தேசத்தை அன்னியர்களிடமிருந்து மீட்டு ஸ்வதந்திரம் வாங்கித் தந்தார் தேசப்பிதா மஹாத்மா காந்தி, ஆகவேதான் அவரது வாழ்க்கை சரித்திர புஸ்தகத்துக்கும் ஸத்திய சோதனை எனப் பெயரிடப்பட்டது,
1950 ஜனவரி 26ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது பாரத தேச (அசோக சக்கிர) அடையாளச்சின்னத்தின் கீழ் பகுதியில் முண்டகோபநிஷத்தின் வாக்கியமான ஸத்தியமேவ ஜயதே (வாய்மை மட்டுமே வெல்லும்) என்னும் சொற்கள் தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கின்றன, ஸத்தியத்தையே பேசுபவருக்கு எதிலும் வெற்றிதான் கிட்டும் என்பதையே இது வெளிப்படுத்துகிறது.
தற்காலத்தில் ஸத்தியத்தையே பேசுவதும் ஸத்திய வாழ்க்கை வாழ்வதும் ஸாத்தியமா? என்று தோன்றலாம், ஸ்ரீ ஆதிசங்கரர் தனது ப்ருஹ்ம ஸூத்ர பாஷ்ய ஆரம்பத்தில் ஸத்யாந்ருதே மிதுனீ க்ருத்ய அதாவது ஸத்தியமும் பொய்யும் கலந்ததே இவ்வுலகம் (வாழ்க்கை) என்கிறார். இருந்தாலும் பொய்யைச் சுறுக்கி ஸத்தியத்தை (ஒளியை)ப் பெருக்கி சில காலமாவது நம்மால் வாழ முடியும், எப்போதும் ஸத்தியத்தையே பேச முடியா விட்டாலும் கூட, தெய்வ வழிபாடு செய்யும் ஆலயங்கள், தெய்வங்களை ஆராதிக்கும் நவராத்திரி ஸரஸ்வதி பூஜை போன்ற நாட்கள், ஸரஸ்வதியின் நக்ஷத்திரமான மூல நக்ஷத்ரம், போன்ற சில நாட்களிலும், பெற்றோர், ஆசிரியர்,ஆசார்யர், மஹான்கள், போன்ற சில மனிதர்களிடமும் மட்டுமாவது ஸத்தியத்தையே பேசுவது என்னும் கொள்கையை கடைபிடிக்க முயற்சிக்கலாம்,
தற்கால சூழ்நிலையில் நாம் ஸத்தியம் பேசுபவராக இருக்க நினைத்தாலும் நம்மை சுற்றியிருக்கும் சூழ்நிலை நம்மை பொய் சொல்லும்படி செய்து விடுகிறது என்கின்றனர் சிலர், இது ஓரளவு உண்மைதான் என்றாலும் இதற்கும் ஓர் மாற்று வழியுண்டு, அதுதான் காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகள் தனது வாழ்க்கையில் கடைசிவரை கடைபிடித்த உயர்ந்த வழி, அதுதான் மௌனம், ஆகவே பொய் சொல்லும் சூழ்நிலை தோன்றினாலும் கூட அப்போது பொய்யும் ஸத்யமும் (எதுவும்) பேசாமல் மௌனமாக இருந்து விடலாமே, மெளனேன கலஹோ நாஸ்தி (மௌனமாக இருந்தால் கலஹமில்லை), மௌனம் ஸர்வார்த்த ஸாதகம் (மௌனம் அனைத்தையும் ஸாதிக்கும் ) என்கிறது நீதி சாஸ்திரம்,
ஆகவே ஒவ்வொருவரும் கூடியவரை (மற்றவர் மனது புண்படாதவாறு) ஸத்தியத்தையே பேச முயற்சிக்கலாம், பொய்யே பேசி பழகி விட்ட நமக்கு, இது உடனடியாக ஸாத்தியமில்லாதது போல் இருக்கலாம், ஆனாலும் ஒவ்வொரு மாதமும் ஸரஸ்வதியின் நக்ஷத்ரமான மூல நக்ஷத்திர நாள், அல்லது வருஷத்திற்கு ஒருமுறை வரும் ஸரஸ்வதி பூஜை நாள், ஆகியகாலத்திலாவது பொய்யே பேசாமல் ஸத்தியம் பேச முயற்சிக்கலாம், அல்லது மௌனமாக இருக்கலாம், இதுவே நாம் ஸரஸ்வதி தேவிக்குச் செய்யும் மிகப்பெரும் பூஜை, இதுவே ஸரஸ்வதியை ஸந்தோஷிக்கச் செய்யும், நமது தேவைகள் அனைத்தையும் ஸரஸ்வயின் மூலம் பெற ஸுலபமான வழி இதுவே,
இதுவே நாம் நமக்கும் நமது குடும்பத்துக்கும் நமது தேசத்திற்கும் செய்யும் மிகப்பெரும் ஸேவை, இதற்கு பகவான் நமக்கு அனுக்ரஹிக்கட்டும்.
No comments:
Post a Comment