Let a Vedic priest enter your home every month

Let a Vedic Priest Enter Your Home Every Month

Search This Blog

Monday, November 01, 2010

Vaithikasri November 2010 Editorial


நமது கலாச்சாரத்துக்கும் சாஸ்திர ஸம்ப்ரதாயங்களுக்கும் அடிப்படை நம்பிக்கை தான், அந்த நம்பிக்கை என்பது அறிவு சார்ந்ததாக அமைந்துள்ளது, நமது இந்திரியங்களுக்கு புலப்படாத புண்யம் பாபம் தெய்வம் தர்மம் அதர்மம் ஸ்வர்கம் நரகம் பரலோகம் போன்ற பற்பல விஷயங்களை, தனது தவ வலிமையால் உணர்ந்த மஹர்ஷிகள் யோகிகள் ஸித்தர்கள், நமக்குஉணர்த்துகிறார்கள்,



அவர்களின் சுயநலமற்ற இந்தச் செயலை புரிந்து கொண்டு, அவர்களது வார்த்தைகளை அப்படியே நம்பி நாமும் ஏற்றுக்கொள்கிறோம், இந்த நம்பிக்கைதான் நமது மதத்துக்கு நமது ஆன்மிகப் பயணத்துக்கு அடிப்படையாக அமைகிறது, ஆகவேதான் நமது பழக்க வழக்கங்களை அறிவியல் காரணங்களைக் கொண்டு ஆராயாமல் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே பலகாலமாக நாம் அனுஷ்டித்து வருகிறோம்,



பலர் நமது சாஸ்திர ஸம்பிரதாயங்களுக்கு விக்ஞான ரீதியான காரணங்களைக் கேட்கிறார்கள், மெய்ஞானத்தை விக்ஞானத்தைக்கொண்டு ஆராய்வதில் ப்ரயோஜனமில்லை, ஆனாலும் முதன் முதலில் நமது ஸம்ப்ரதாயங்களை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இது உதவியாக இருக்குமே என்பதற்காக நமது அறிவுக்குத்தக்கவாறு சிற்சில காரணங்களைக் கூறிவருகிறோம், இது ஒரு சிலருக்கு நமது ஸம்ப்ரதாயத்திலுள்ள அவநம்பிக்கையை போக்கவும் உதவலாம்,


ஆனால் ஒரு சிலர் வெறும் நம்பிக்கையை மட்டும் அடிப்படையாகக்கொண்டு செய்யப்படும் செயல்கள் நீடிக்காது என்கிறார்கள், இது தவறு, உலக ஸ்ருஷ்டி முதல் வேதம் சாஸ்திரம் மஹர்ஷிகளின் வாக்கு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே நமது கலாசாரம் வளர்ந்து வருகிறது, முன்னோக்கிச் செல்கிறது, அறிவை அடிப்படையாகக்கொண்டு செயல்படும் (விக்ஞானிகள்) பலரும் தெய்வ நம்பிக்கையுடனேயே இருக்கிறார்கள், ஏன் தெய்வத்தையே முழுமையாக நம்புகிறார்கள் என்பதே இன்றைய சூழ்நிலை.



நம்பிக்கை அடிப்படையிலான நமது ஹிந்து மதத்துக்கு, கலாசாரத்துக்கு, சாஸ்திர ஸம்பிரதாயங்களுக்கு, தற்சமயம் அரசாங்க ரீதியில் ஓர் அங்கீகாரம் கிடைத்துள்ளது, ஆம், அயோத்தியில் ராமஜன்ம பூமி விஷயத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்புதான் அது,



அகழ்வாராய்ச்சிகள் தஸ்தாவேஜுகள் முதலியவற்றை பரிசீலித்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், ராமர் பிறந்த இடம் இது என்னும் லக்ஷோபலக்ஷம் மக்களின் நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு, அவர்களின் நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டு, இந்தத் தீர்ப்பு வழங்கப்படுகிறது என்று தீர்ப்பில் நீதியரசர்கள் கூறியிருக்கிறார்கள், தீர்ப்பின் விபரங்களை ஆராயாமல் அதன் ஒரு பகுதியான நம்பிக்கை அடிப்படையிலான இந்தத்தீர்ப்பு என்னும் வாசகத்தை மட்டும் நாம் பார்க்கலாம், நமது தேசம் ஸுதந்திரம் அடைந்தது முதல் ஏராளமான தீர்ப்புகள் வெளியிடப்பட்டிருந்தாலும் நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டு வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு இதுவாகத்தான் இருக்க முடியும், அறிவுசார்ந்த ரீதியில் செயல்படும் நீதியரசர்கள், ஸுமார் 60 ஆண்டு காலமாக பல விபரங்களை ஆராய்ந்து, நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு என்னும் வாசகத்துடன் வழங்கிய இந்தத் தீர்ப்பு அரசாங்கம் மற்றும் அறிவு சார்ந்த ஸமுதாயம் சார்பாகக் கூறப்பட்ட கருத்தாகவே கொள்ளவேண்டும்,



நமது கலாசாரத்துக்கும் மற்றும் ஒவ்வொரு மதத்திலும் பின்பற்றப்படும் நம்பிக்கை அடிப்படையிலான பற்பல செயல்களுக்கும், இநதத் தீர்ப்பு வருங்காலத்தில் மிகப்பெரும் துணையாக இருக்கும் என்கிறார்கள் படித்த பெரியோர்கள், ஆகவே ஒவ்வொரு மதத்திலும் காணப்படும் நம்பிக்கை அடிப்படையிலான செயல்களை ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், மற்றவரின் மத ரீதியான நம்பிக்கைகளுக்கு ஒவ்வொருவரும் மதிப்பளிக்க வேண்டும், அதற்கான விக்ஞான ரீதியானக் காரணங்கள் தற்சமயம் நமக்கு புலப்படாவிட்டாலும் கூட, நமது முன்னோர்கள் செய்து வந்த அனுஷ்டானங்களை பூஜை ஜப ஹோமங்கள் தர்ப்பணங்கள் ச்ராத்தங்கள் முதலானவற்றை நாமும் தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்யவேண்டும்,


விக்ஞான ரீதியான காரணங்கள் மாறினால் நமது செயல்களிலும் சுணக்கம் ஏற்படலாம், ஆகவே எதற்கும் ஏன்? எதற்கு? என்று விக்ஞான ரீதியில் காரணங்களை ஆராய்ந்த பின்பே செய்வது, என்று எண்ணாமல். நமது மத நம்பிக்கை இது. நமது சாஸ்திர ஸம்பிரதாயம் இது. என்று ஏற்றுக்கொண்டு அனுஷ்டானங்களை செய்ய ஆரம்பித்து விட்டு. பிறகு தேவை பட்டால் விக்ஞானரீதியான காரணங்களை புரிந்து கொண்டு, செய்யும் அனுஷ்டானங்களை உறுதிபடுத்திக் கொள்ளலாம், இதுவே நமது முன்னோர்கள் காண்பித்த நடைமுறை,



இவ்வாறு நாம் செய்யும் அனைத்து தெய்வ காரியங்களையும் அனுஷ்டானங்களையும்ச்ரத்தை, விஸ்வாசம், முழு நம்பிக்கையுடன் செய்து முழுமையான பலனையடையவும், மற்றவரின் நம்பிக்கையைஅவமதிக்காமல், மற்றவரின் (மற்ற மதத்தினரின்)நம்பிக்கைகளை யும் மதித்து நடந்துகொள்ளவும், பகவான் நமக்கு அனுக்ரஹிக்கட்டும்,

Vaithikasri October 2010

நமது மதத்திலும் வேதங்களிலும் புராணங்களிலும் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிக கௌரவம் தரப்பட்டிருக்கிறது, பெண்களை ஸாதாரண மனிதரைப்போல் பாவிக்காமல் தெய்வமாகவே கருதி கௌரவம் தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது, வயதான பெண்களை மட்டுமல்லாமல் சிறுவயது பெண் குழந்தையைக் கூட பாலா த்ரிபுர ஸுந்தரியாக கன்னிகையாக பூஜிக்கிறோம், வயதான பெண்களை ஸுவாஸினிகளாக அம்பாளாக பாவித்து பூஜிக்கிறோம்,



ஒரு பெண் (மனைவி) அனுமதியின்றி ஆண்(கணவன்) செய்யும் தானம் தர்மம் போன்றவைகள் பலனைத்தராது, தனது பெற்றோருக்கு செய்யும் ச்ராத்தம் கூட பெண்(மனைவி) கூட இருந்தால்தான் (ஔபாஸன அக்னியில்) நடத்தமுடியும் ,


யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா: என்பதாக எந்தக்குடும்பத்தில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்குதான் அனைத்து தெய்வ பூஜைகளும் விரதங்களும் பலனைத்தரும் என்கிறார் மனு, ஆகவே ஆண்களைவிட பெண்களுக்குத்தான் ஸுலபமாக அனைத்து உரிமைகளும் நமது சாஸ்திரங்களில் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் ஸ்வபாவமாகவே அபலைகள் (உடல் வலிமை குன்றியவர்கள்)என்பதால் அவர்களுக்கு அடிக்கடி ஓய்வு தரப்படுகிறது,



அர்த்தானாம் ஆர்ஜநே சைவ வ்யயே சைவ நியோஜயேத் என்று , ஸம்பாதிக்கும் பணத்தைசொத்தைபொருளை வீட்டுப் பெண்களிடம் மனைவியிடம் ஒப்படைத்து , அவர்கள் மூலமாக அவற்றை சிலவு செய்யச் செய்யவேண்டும் என்கிறது நீதி சாஸ்திரம். இப்படி பெண்களுக்கு அதிகமாக கௌரவம் தரக்காரணம் அவர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும் தபஸ் (கற்பு) சக்திதான், ஆம்



ஆண்கள் பலவிதமாக கஷ்டப்பட்டு பல ஸாதனைகள் செய்து ஸம்பாதிக்கும் தபஸ் சக்தியை பகவான் பெண்களுக்கு இயற்கையாவே அமைத்திருக்கிறார், இந்த சக்திக்குத்தான் பதிவ்ரதா சக்தி எனப்பெயர், தனது நடவடிக்கையின் மூலமும் தனது ஆசாரத்தாலும், அன்பாலும் சிற்சில கட்டுப்பாடுகளாலும் இந்த சக்தியை அனைத்துப் பெண்களும் முன் காலத்தில் பாதுகாத்து வளர்த்து வந்தார்கள், அத்துடன் தேவையான நேரத்தில் அத்தகைய தனது பதிவ்ரதா சக்தியை உபயோகித்தும் வந்தார்கள்.


தனது கணவனை, , கணவன் ஆசைபட்ட தாஸியின் வீட்டுக்கு கூடையில் ஸுமந்து சென்றாள் நளாயினீ என்னும் பதிவிரதை, ஆணி மாண்டவ்யர் சாபமிட்டார், விடிந்தால் உன் கணவனுக்கு மரணம் என்று, கணவனின் மரணத்தைத் தடுக்க வேறு வழி தெரியாத கற்புக்கரசி நளாயினி, ஸூர்யனே உதிக்கக் கூடாது என்று ஆணையிட்டாள், ஸூர்யனும் உதிக்கவில்லை, பிறகு தேவர்களின் ப்ரார்தனைக்கிணங்க மறுபடி ஸூர்யனை உதிக்கச்செய்தாள், ஸ்ரீமத் ராமாயணத்தில் ஓர் ஸம்பவம் ஸ்ரீ ராமரின் தர்மபத்னி ஸீதாதேவி ராவணணிடம் தனது கற்பின் பெருமைகளைக் கூறுகிறாள்,



அஸந்தே3சாத் து ராமஸ்ய தபஸசாநு பாலநாத்
ந த்வாம் குர்மி த3க்3ரீவ ப4ஸ்ம ப4ஸ்மார்ஹ! தேஜஸா


ராவணா!,நீ செய்யும் கொடுமைகளுக்கு நான் நினைத்தால் உன்னை எனது கற்புக்கனலால் எரித்து சாம்பலாக்கிவிடுவேன், ஆனால் நான் செய்யமாட்டேன், ஏன் தெரியுமா!, எனது கணவர் எனக்கு (ஆபத்காலத்தில் உனது பதிவ்ரதா சக்தியை உபயோகித்திக்கொள் என்று)ஆணையிடவில்லை, அவர் ஸம்மதமின்றி நான் செய்ய மாட்டேன், ஆகவே நான் உன்னை விட்டுவிடுகிறேன் என்கிறாள், இதுதான் பதிவ்ரதா சக்தி,



கற்புத் தவறாத மங்கையர்க்கோர் மழை பதிவ்ரதா சக்தியுடன் திகழும் மாதர்க்காக மாதம் ஒருமுறை மழை பெய்யும் என்கிறாள் ஔவை பிராட்டி, கண்ணகி என்னும் கற்புக்கரசி தனது பதிவிரதா சக்தியால் மதுரை மாநகரையே எரித்தாள் என்பதை இலக்கியம் நமக்கு எடுத்துரைக்கிறது, இதைப்போல் நமது தேசப்பெண்கள் தனது பதிவ்ரதா சக்தியின் மூலம் மிகப்பெரும் காரியங்களையும் ஸாதித்துள்ளனர், ஆனால் இன்றைய பெண்களிடமும் அத்தகைய சக்தி இருக்கிறதா? என்று கேட்டால், ஆம் இன்றளவும் அனைத்து பெண்களிடமும் இத்தகைய சக்தி இருக்கத்தான் செய்கிறது என்பதுதான் பதில்,



ஆனால் இன்றைய பெண்கள் இத்தகைய சக்தியை வெளிப்படுத்துவதில்லை, ஏன் என்றால் பெண்கள் பலர் தன்னிடம் இத்தகைய பதிவ்ரதா சக்தி இருப்பதையே தெரிந்து கொள்ளவில்லை, மேலும் பலர் ஸ்வபாவமாக (இயற்கையாக) அமைந்த இந்த தனது சக்தியை பாதுகாக்கத் தெரியாமல் வழிதவறி இழந்து விட்டார்கள், பலர் இழந்து கொண்டிருக்கிறார்கள், இதற்குக்காரணம் பதிவ்ரதா சக்தியை ஸரியாக பாதுகாக்காததுதான், இதை பாதுகாக்கும் வழிமுறைகளாக பெண்கள் சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்,



எப்போதும் தந்தை கணவர் மகன் என்னும் பாதுகாப்பு வட்டத்தில் வாழ வேண்டும், குல ஸம்ப்ரதாயங்களை அனுஸரித்து, செய்ய வேண்டிய (குலதைவ ப்ரார்த்தனைஸமராதனை போன்றவற்றை) செய்யச் செய்ய வேண்டும், செய்யக்கூடாத செயல்களிலிருந்து குழந்தைகளை கணவனை தடுக்க வேண்டும், தானும் தவிர்க்க வேண்டும், குழந்தைகளுக்கு நல்ல போதனைகளை அளிக்க வேண்டும்,



வேத சாஸ்திரத்தை யனுஸரித்து பற்பல கர்மாக்களை சொல்லி வந்த ஆபஸ்தம்ப மஹர்ஷி, தனது ஆபஸ்தம்ப க்ருஹ்யஸூத்ரபுஸ்தகத்தில் அட்ஞீபீஙஹட்க்ஷீணூஜ்சூ: ஙணூசூணிச்ஙூயு ஆவ்ருத சாஸ்த்ரீப்ய: ப்ரதீயேரன் நான் கூறாத பல குடும்ப ஸம்ப்ரதாயங்களையும் சாஸ்திரங்களையும் குடும்பத்திலுள்ள பெண்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்,



ஏனென்றால் இன்றும் கூட பல குடும்பங்களிலும் நடைபெறும்தெய்வ பித்ரு காரியங்கள் பெண்களின் தூண்டுதலாலேயே பெண்களின் ஒத்துழைப்பாலேயே நடைபெறுகின்றன, ஆகவே குடும்பத்தில் தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து கொண்டு பெண்கள் செயல்பட வேண்டும், அவரவர்கள் தாயார் மாமியார் போன்ற பெரியோர்களிடமிருந்து குடும்பப் பழக்க வழக்கங்களைக் கேட்டுத்தெரிந்து கொண்டு, அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும்,



பெரியோர்களைக்காண ச் செல்லும் போதும் ஆலயங்களுக்குச்செல்லும் போதும் ஆடை அணிவதிலும் மற்றும் சில விஷயங்களிலும் (தலையை விரித்துப்போட்டுக்கொள்ளாமல் இருத்தல், ஆசாரமாக ஆடை அணிதல்) சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், முன்னோர் ஆசாரப்படி சாஸ்திரப்படி தனது கணவனையும் தனது குழந்தைகளையும் அழைத்துச்செல்வதில் கவனமாக இருக்க வேண்டும்.



ஒரு வாஸுகி தேவி பதிவ்ரதையுடன் கணவருக்குப் பணிவிடை செய்ததால்தான் இன்றையதினம் நமக்கு ஐயன் வள்ளுவன் மூலம் திருக்குறள் என்னும் பொக்கிஷம் கிடைத்துள்ளது, ஒரு சாரதாதேவியின் அனுகூலத்தால்தான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் உலகம் போற்றும் உத்தம ஞானியானார், குடும்பத்தைத் துறந்து விட்டு தபஸ் செய்யக்கிளம்பிய யாக்ஞவல்க்ய மஹர்ஷியை தடுத்து நிறுத்தி தாங்கள் எதை (மரணமற்ற தன்மையை) நோக்கிச் செல்லுகிறீர்களோ எனக்கும் அந்த வழியை காட்டிவிட்டு, என்னையும் அந்த வழியிலேலே அழைத்துச்செல்லுங்கள் ,என்று தைரியமாகக் கூறினாள் மைத்ரேயி,



ஆகவேவயதானவர்கள் வயதான காலத்தில் பொருப்புகளை தனது நாட்டுப்பெண், பெண், முதலானவர்களிடம் ஒப்படைத்து ஆத்யாத்மிக விஷயத்தில் ஈடுபட முயற்சிக்க வேண்டும். நமது பாரததேசப்பெண்களுக்குத்தான் இத்தகைய பதிவ்ரதா சக்தி அதிகமாக இயற்கையாகவே பகவானால் அளிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு பெண்களும் தனக்குள்ள சக்தியை உணர்ந்து கொண்டு அதன்படி நடந்து கொண்டு தனது தபஸ் சக்தியை பாதுகாத்து வளர்த்து இந்த தேசத்திற்கும் தனக்கும் நன்மையை செய்ய பகவான் அனுக்ரஹிக்கட்டும்.

Thursday, August 12, 2010

ஆசிரியர் எண்ணங்கள் ஆகஸ்ட் 2010

ஆசிரியர் எண்ணங்கள் August 2010
ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நேர்வழிப்படுத்தி நன்மையை அடைவிப்பதே நமது வேதங்களின் நோக்கமாகும்,

உலகம் போற்றும் உத்தம உபநிஷத் தத்துவத்தை வேதம்தான் உணத்துகிறது,

பௌதிக தத்துவத்தை விக்ஞானிகளும் வியக்கும்படி விளக்குவது வேதம்தான்.

காமதேனுவைப்போலக் கருதும் அனைத்து பொருளையும் கைக்கு எட்டும்படி செய்யும் ஏராளமான கர்மாக்களை காட்டுவது வேதம்தான்,

கடவுளைக் கண்கொண்டு காண பக்திவழி காட்டுவது வேதங்களே.

இப்படிப்பட்ட அரிய பொக்கிஷமான வேதத்திற்காகவும், நாம் இதுவரையில் செய்த பாவத்தைப் போக்கிக் கொள்ளவும், நம்மை பரிசுத்தமாக்கும் காயத்ரீ மந்திரத்துக்காககவும் வருஷத்தில் ஒருநாள் ஒதுக்க வேண்டும், அந்த நாள்தான் உபாகர்மா (ஆவணி அவிட்டம்) செய்யப்படு நாள்.


அனாதியான நம் வேதம் நம் முன்னோர்களால் கற்றும் கற்பிக்கப்பட்டும் வந்தது. அதை நாம் இளமையிலேயே கற்றுள்ளோம், அது நம்மிடம் வந்து நாளானதால் பழமை என்ற தோஷம் உண்டாகிறது.ஸமையல் செய்த பொருட்ளை ஒரு ஜா(யா)மமானால் உபயோகிக்கக்கூடாது என்பதைப்போல் கற்ற வேதத்தையும் பழமையாகிவிட்டால் உபயோகிக்கக்கூடாது என தர்மசாஸ்திரம் கூறுகிறது,

ஏன்என்றால்? அதில் சில தோஷம் தோன்றுகிறது. சில நமக்கே புலப்படும். சிலவை அகக்கண்ணுள்ள முனிவர்களுக்கே தெரியும். ஊசிப் போனதை நம் நாக்கும், மூக்கும் ஏற்பதில்லை. துர்நாற்றம் என அதை உண்ண மறுக்கிறோம். அங்ஙனமே நம்மிடமுள்ள வேதத்திற்கு பழமை என்ற ஒரு தோஷம் ஏற்படுகிறது. அந்த தோஷம் நன்மை அடையாதபடி தடை செய்யும். அதை அகற்றவே உபாகர்மா என்ற ஆவணி அவிட்டம் செய்கிறோம்.


தேவபவித்ரம் எனக்கூறப்படும் வேதத்திற்கே தோஷம் உண்டாகுமா? என்ற ஸந்தேஹம் தோன்றும், நமது அனாசாரத்தால் நாம் வேதோக்த கர்மா செய்யாததால், நாம் தினஸரி ப்ரும்ம யக்ஞம் கூறாததால் அந்த வேதத்துக்கும் தோஷம் தோன்றலாம். அதனால் வேதத்திற்கு யாதொரு குறையுமில்லை. நமக்கு அருள்புரியும் வேதத்தின் சக்திதான் குறையும்.

வேதோக்தமாக, கும்பாபிஷேகம் செய்து பிரதிஷ்டை செய்த ஆலய மூர்த்திகளுக்கு சில அசுத்தம் ஏற்பட்டால்ஆலய மூர்த்திக்குத் தீட்டோ, அசுத்தமோ உண்டா? ஆனால் அந்த தெய்வ விக்ரஹங்களுக்கு அனுக்ரஹம் செய்யும் அருள் சக்தி குன்றும் என்பது போல், நமது ஸங்கத்தால் பரிசுத்தமான வேதமும் சிறிது தோஷமுள்ளதாக ஆகின்றது.

உயர்ந்த வஸ்த்துக்களும் மல மூத்ர ரத்த மஜ்ஜை நிறைந்த நம் உடலுட் சென்றவுடன் மலமாகிறதல்லவா, அதுபோல்

ஆதலால்தான் இயற்கையிலேயே பரிசுத்தமாயினும் நம்மாலும், காலத்தாலும் வேதம் தோஷமுள்ளதாக ஆகின்றது, ஆயுதங்கள் உபயோகிக்கப்படாவில் துருப்பிடிக்கும். அதைச்சாணை தீட்டவேண்டும், உபயோகமானாலும் கூறு மழுங்கும். அப்போதும் அதைச் சாணை தீட்டவேண்டும்.

ஸ்ரீ க்ருஷ்ணர் ஒருவருக்கே வேதம் இந்த தோஷமில்லாது இருக்கட்டும் என அவர் குரு ஸாந்தீபினிமஹர்ஷி அருள் புரிந்தார். அப்படியிருந்தும் தாம் செய்யாவிடில் பிறரும் செய்யார் என அஞ்சி, கண்ணனும் ராமரும் கூட உபாகர்மாவை சிரத்தையாகச் செய்தனர்.

வேதத்தை அத்யயனம் செய்தாலல்லவா இந்த தோஷம் தோன்றும்? வேதமே தெரியாதவர்கள் இதை ஏன் செய்ய வேண்டும்? என்று சிலருக்குத் தோன்றலாம்.

மூன்று வேதங்களிலிருந்தும் ஸாரமாக எடுக்கப்பட்டது மூன்று பாதமுள்ள காயத்ரீ. அது உபநயனத்தின் (பூணல்போடும்) போது நம் அனைவருக்கும் உபதேசிக்கப்பட்டுள்ளது. அந்த வேத பாகம் (காயத்ரீ மந்திரம்) தோஷமில்லாமல் இருக்கவாவது கட்டாயம் உபாகர்மாவை செய்ய வேண்டும்.

இந்த உபாகர்மா ப்ரும்ஹசாரி, க்ருஹஸ்தன், வானப்ரஸ்தன் என்ற மூன்று ஆஸ்ரமிகளாலும் செய்யத்தக்கது. துறவிகள் கூட வ்யாஸபூஜை என்ற முறையில் சிஷ்ய பரிவாரத்துடன் ஸ்ரீவேதவ்யாஸரை பூஜிக்கின்றனர்.

ஆகவே வேதமும், வித்யாப்யாஸமும் ஸம்பந்தமுள்ள கர்மா இந்த உபாகர்மா,ஆகவே உபாகர்மா அன்று ஒருநாளாவது வேதம், வேத அங்கங்களின் முதல் பதத்தையாவது குரு முகமாக உபதேசம் பெற்றுக்கொள்ளலாம்,

வேதங்களுக்கு வேதமந்திரங்களுக்கு நமக்கு ஸொந்தமான காயத்ரீ மந்திரத்துக்கும் சக்தியைத்தரும் உபாகர்மாஆவணி அவிட்டம்என்று கூறப்படுகிறது,

வருடத்துக்கு ஒரு நாள் செய்ய வேண்டிய இந்த நிகழ்ச்சியை நாம் சிறிது கவனத்துடன் சிரத்தையுடன் செய்ய வேண்டும், மற்ற மதத்தினர் வேதத்துக்காக ஒரு மாதம் முழுவதும் பகலில் உபவாஸம் இருந்து விரதம் அனுஷ்டிக்கிறார்கள், நாம் அன்று ஒரு நாளாவது நியமத்துடன் இருக்க வேண்டாமா? ,

அன்புடன் காண்டரிஷிகளுக்குச் செய்யும் ஹோமத்தில் நாம் அனைவரும் ஒன்று சேரலாமே? வேத வேதாந்தங்களை வ்யாஸ கலசத்தினருகே, அக்னி முன்னே ,ஆசார்யர் முகமாக உபதேசம் பெறலாமே? இந்த ஒரு நாளேனும் வேற்றுமையைவிட்டு, ஒற்றுமையுடன் நம் ஸமூகத்துடன் அளவளாவ இரண்டொரு மணி நேரம் அளிக்கலாமே? இதற்கு பகவான் அனுக்ரஹிக்கட்டும்,

ஆசிரியர் எண்ணங்கள் july 2010

ஆசிரியர் எண்ணங்கள் july 2010

நமது ஸனாதன தர்மத்துக்கு மூலப்ரமாணமா இருப்பது நமது வேதங்களே, யாராலும் இயற்றப்படாத என்றும் அழியாத இந்த வேதங்கள் இன்று வரை பலரால் காப்பாற்றப்பட்டு வருகின்றன, வேதங்களை அழியாமல் காப்பாற்றுதல் என்றால் அதை முறையாக கற்றுக் கொண்டு அதன்படி செயல்படுதல் எனப்பொருள்,

நாகரீகம் மிகவும் வளர்ந்து விட்ட இன்றைய சூழ்நிலையில்கூட தனது பரம்பரை வழக்கப்படி தன்னைப்போல் தனது குழந்தைகளும் வேதம் அத்யயயனம் செய்ய வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள், குறிப்பாக வைதிகர்கள் புரோஹிதர்கள் அர்ச்சகர்கள்சிவாச்சார்யர்கள் என்னுகிறார்கள், இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம், ஆனாலும் வேதத்தை தனது குழந்தைக்கு தானே தனது வீட்டில் கற்றுக் கொடுக்க இயலாமல் வேத பாடசாலைக்கு அனுப்புகிறார்கள்,

இதற்கு அவர்கள் வஸிக்கும் சின்னஞ்சிறிய வீட்டின் சூழ்நிலை வேதம் கற்றுத்தர பொருமையின்மை நேரமின்மை போன்ற பற்பல காரணங்கள், இருந்தாலும் குழந்தைக்கு உரிய காலத்தில் உபநயனம் செய்து வைத்ததைப்போலவே அந்த குழந்தைக்கு வேதத்தையும் தானே கற்றுத்தர முயற்சிக்க வேண்டும்,

எத்தனையோ குடும்பத்துக்கு புரோஹிதராக இருந்து ஹிதமான ஆலோசனைகள் சொல்லி, வைதிக கார்யங்களை நடத்தி வைப்பவர்கள் தனது குழந்தைக்கு என சிறிது நேரத்தை ஒதுக்கி பொருமையுடன் தான் கற்ற வேதத்தை தனது பிள்ளைகளுக்கு சொல்லித்தரலாம், முழுமையாக முடியாவிட்டாலும் கூட புருஷஸூக்தம் ருத்ரம் சமகம் போன்ற முக்கியமான வேதப்பகுதியையாவது தானே சொல்லி வைக்க முயற்சிக்கலாம்.

உபநயனம் செய்து வைத்து வேதமும் சொல்லித்தருபவரே ஆசார்யர் எனப்படுவார் என்கிறது சாஸ்திரம், ஒவ்வொரு குழந்தைக்கும் அவரவர் தந்தையே முதன் முதல் ஆசார்யன் ஆகிறார், அஷ்ட வர்ஷம் ப்ராஹ்மணம் உபநயீத தம் அத்யாபயீத எட்டு வயதில் தனது பிள்ளைக்கு உபநயனம் செய்து வைத்து வேதமும் கற்றுத்தரவேண்டும் என்கிறார் ஆபஸ்தம்பர் தர்ம ஸூத்ரத்தில்.

ஆகவே தன் வீட்டில் வஸதியில்லை நேரமில்லை பொருமையில்லை போன்ற காரணங்களை பொருட்படுத்தாமல் வைதிகர்கள் புரோஹிதர்கள் அர்ச்சகர்கள் சிவாச்சார்யர்கள் ஆகியோர் தனது வம்ச பரம்பரா ப்ராப்தமான (வேதஆகம) வித்யையை, தானே சிறிதாவது தனது குழந்தைகளுக்கு சொல்லித்தர ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்

Thursday, June 10, 2010

ஆசிரியர் எண்ணங்கள் ஜூன் 2010

ஆசிரியர் எண்ணங்கள் June 2010
தெய்வ சக்தியால் மட்டுமே ஸாதிக்க முடியும் என்னும் பல விஷயங்களில் குழந்தை பிறப்பதும் ஒன்று, ஒரு ஜீவன் எப்படிப்பிறக்க வேண்டும்? எங்கே? யாருடைய குடும்பத்தில்? யாருக்குக் குழந்தையாக? பிறக்க வேண்டும் என்பதையும் அவரவரின் கர்மாக்களுக்குத் தகுந்தவாறு தெய்வமே தீர்மானிக்கிறது, ஒரு குழந்தை மனிதனாகவோ மிருகமாகவோ பிறப்பதும் ஆணாகவோ பெண்ணாகவோ பிறப்பதும் பாரதத்திலோ வெளிநாட்டிலோ ஆஸ்திக நாஸ்திக குடும்பத்திலோ பிறப்பதும் தெய்வ அருளால் மட்டும்தான்.

இவ்வாறு தெய்வ அருளால் பிறவியெடுக்கும் ஒரு ஜீவன் நம் குடும்பத்தில் வந்து பிறக்க வேண்டுமென்றால், நமக்கு தெய்வ அருள் இருக்கிறது என்றுதான் பொருள், இந்த தெய்வ அருள் ஒரு சிலருக்குத் தான் கிடைக்கிறது,

திருமணமாகி ஒரு சில மாதங்களிலேயே குழந்தை தவழ்ந்து விளையாடும் குடும்பத்தையும் , திருமணமாகி வெகு நாட்களாகியும் பல பரிஹாரங்கள் செய்தும் குழந்தை பிறக்கத் தாமதமாகும் குடும்பத்தையும் காண்கிறோம்,

ஆகவே குழந்தை எப்போது பிறக்கவேண்டும்? எப்படிப் பிறக்க வேண்டும்? என்பதை நாம் தீர்மானிக்க முடியாது, நமது புண்யபாபங்களின் பரிணாமத்துக்கு ஏற்ப தெய்வமே இதை தீர்மானிக்கிறது,


தற்காலத்தில் ஒரு சிலர்,பொருளாதாரம் போதாதே!,அழகு குறையுமே! போன்ற ஒரு சில ஸுயநலக் காரணத்துக்காக குழந்தை பிறப்பதைத் தள்ளி போடுகிறார்கள், அல்லது கர்ப்பத்தில் உருவாகும் குழந்தையை கலைத்து விடுகிறார்கள் என்பதை அறிகிறோம், இது தவிர்க்கப்பட வேண்டும்,

ஏனென்றால் ஒரு ஜீவனை கொல்லுதல் என்பது மிகப்பெரும் பாபம், கர்ப்பத்தில் உருவாகும் ஜீவனுக்கும் உயிர், மனது, உணர்ச்சிகள், உடல், ஆகியவை உண்டு, அந்த ஜீவனைக் கொலை செய்தல் என்பது ப்ரூணஹத்தி (குழந்தையைக் கொல்லுதல்) என்னும் பாபம், இதற்கு ப்ராயஸ்சித்தம் செய்வது தற்காலத்தில் ஸாத்யமில்லை,

மேலும் பாபம் செய்துவிட்டு ப்ராயஸ்சித்தம் செய்து கொள்வதைக் காட்டிலும் பாபமே செய்யாமல் இருக்கலாம் அல்லவா? இவ்வாறு சிசுவை கொலை செய்தல் அல்லது சிசு உருவாவதைத் தடுத்தல் என்னும் பாபம் தன்னை மட்டுமில்லாமல் தனது குடும்பத்தினரையும் கூட பாதிக்கலாம்,

நமது தேசத்தில் எவ்வளவோ பேர்கள் தனக்கு வம்ச வ்ருத்திக்கு ஏதாவது ஒரு குழந்தையாவது பிறக்காதா! என்று பல வருஷமாக ஏங்கிக் கொண்டிருக்க, இறைவன் நமக்கு மட்டும் காலத்தில் கருவில் குழந்தை உருவாகும் பாக்கியத்தை அளித்துள்ளானே ! இது நமக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்! என்று நினைத்து கணவனும் மனைவியும் குடும்பத்தினரும் ஸந்தோஷப்பட வேண்டும்,

குழந்தைச் செல்வம் என்பது மிகப்பெரும் செல்வம், மற்ற வஸதிகளைப் போலவே இதுவும் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிட்டும், அதை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், அவ்வாறின்றி இப்போதுதானே திருமணம் ஆகியிருக்கிறது, இப்போது குழந்தைக்கு என்ன அவஸரம், என்ற தவறான எண்ணத்தை வளர்த்துக்கொள்ளக் கூடாது,

ஜாதக ரீதியாக ஏழ்மையை கஷ்டத்தைஅனுபவிக்கும் குடும்பம் கூட, குழந்தை பிறந்த நேரத்தால், குழந்தையின் அதிர்ஷ்டத்தால் அனைத்து கஷ்டங்களும் விலகி சீரும் சிறப்புமாக வாழுகிறது என்பதை இன்றும் நாம் பார்க்கிறோம்.


நமக்குப் பிறக்கும் குழந்தை ஒரு மாவீரனாகவோ ஒரு யோகீஸ்வரராகவோ ஒரு மாபெரும் மாமேதையாகவோஒரு மிகப்பெரும் தேச பக்தனாகவோ கூட இருக்கலாம், இப்படிப்பட்டவர்கள் இந்த தேசத்துக்கு கிடைப்பதை நாம் ஏன் தடை செய்ய வேண்டும்?

சொல்லப்போனால் குழந்தை பெற்றுக்கொள்வதற்கோ அதை தள்ளிப்போடுவதற்கோ அல்லது தடுப்பதற்கோ நமக்கு முழு ஸுதந்திரம் இல்லை, நமக்குப் பிறக்கும் குழந்தை இந்த தேசத்தின் குழந்தை, இந்த ஸமூகத்தை மேம்படுத்த வரும் மாவீரன்,

ஆகவே இவற்றை நினைத்து நல்ல குழந்தை நம் வம்சத்தில் பிறப்பதை நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


ஆகவே கணவன் மனைவி இருவரும், திருமணம் ஆனது முதல் ஒரே இடத்தில் ஒன்றாக வஸித்தல், காலத்தில் தானாக உருவாகும் கர்ப்பத்தை கலைக்க முயற்சிக்காது இருத்தல் வம்ச வ்ருத்திக்காக தெய்வ அருளால் பிறக்கும் குழந்தையை ஸந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை செய்ய முயற்சிக்க வேண்டும்,

குழந்தை எப்போது பிறக்க வேண்டும் என்பதை தான் முடிவு செய்யக்கூடாது, தெய்வ அருளால் ஏற்படும் கர்ப்பத்தை கலைக்க முயற்சிக்கக்கூடாது, காலத்தில் பிறக்கும் குழந்தையை ஏற்றுக் கொண்டு நன்மையையடைய ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்
May 2010 ஆசிரியர் எண்ணங்கள் May 2010

இந்த மண்ணில் பிறக்கும்போது ஒவ்வொரு குழந்தையும் நல்லக்குழந்தையாகத்தான் பிறக்கிறது, அந்தக்குழந்தை நல்லவனாவதும் தீயவனாவதும் பெற்றோர் வளர்க்கும் விதத்தைப் பொருத்தது என்கிறார் ஒரு கவிஞர், இது உண்மை தான்,

ஆனாலும் நமது சாஸ்திரங்கள் இதையும் மீறி ஒரு விஷயத்தை உணர்த்துகிறது, அதாவது அந்தக் குழந்தை நல்லவனாக, தீயவனாக, உறுவாவது மண்ணில் பிறந்த பிறகு அல்ல, பிறப்பதற்கு முன்பாகவே அதாவது அந்தக் குழந்தை தனது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதே என்கின்றன சாஸ்திரங்கள்,


தாயின் கர்ப்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடையும் குழந்தை, தனக்கு வேண்டிய உணவை எவ்வாறு தாய் மூலம் பெற்றுக்கொள்கிறதோதாய் சாப்பிடும் சாப்பாட்டையே தானும் சாப்பிடுகிறதோஅவ்வாறே தாயின் ஒவ்வொரு இந்த்ரிய ஸுகத்தையும் தானும் அனுபவிக்கிறது, தாய் நுகரும் வாஸனை, தாயால் கேட்கப்படும் சொற்கள், தாயால் காணும் காக்ஷி, தாய் பேசும் பேச்சு, தாய் விடும் மூச்சு, முதலான தாயின் அனைத்து அம்சங்களுமே குழந்தையைச் சென்றடைகிறது,

குறிப்பாக தாய் காதால் கேட்கும் சொற்களும் அதனால் தாய்க்கு ஏற்படும் எண்ணங்களும் அந்தத் தாயையும் தாயின் கர்ப்பத்தில் வளரும் குழந்தையையும் சென்றடையும்,பாதிப்பை ஏற்படுத்தும்,


துஷ்டனான ஹிரண்யகசிபுவின் மகன் ப்ரஹ்லாதன், சிஷ்டனாக (நல்லவனாக) ஆனது எப்படி?, ப்ரஹ்லாதனுக்கு மட்டும் பிறக்கும் போதே தெய்வநம்பிக்கை ஏற்பட்டது எவ்வாறு? இதை பல முறை அவன் தந்தை ஹிரண்யகசிபுவும் குரு சண்டாமர்கர்களும் கேட்டபோதும் அதற்கான பதிலை விரிவாகத் தெரிவிக்காத பக்த ப்ரஹ்லாதன், தன்னுடன் கூட படிக்கும் மாணவர்கள் (இதே கேள்வியை) கேட்கும்போது மட்டும் உண்மையைக்கூறுகிறான்,

அதாவது தனது தந்தை ஹிரண்யகசிபு தவம் செய்ய காட்டிற்குச் சென்றிருந்த ஸமயம், தனது தாய் கயாது என்பவள் கருவுற்றிருந்தாள், இந்திரனின் துன்புறுத்தலுக்கு பயந்த தாய் கயாது அம்மாள், நாரதரை அடைக்கலம் அடைந்தாள், நாரதரும் தனது ஆசிரமத்திலேயே அடைக்கலம் தந்ததுடன், அடிக்கடி பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் பெருமைகளையும் குணங்களையும் கதைகளாக கயாது அம்மாளுக்குக் கூறிவந்தார்,

அந்த ஸமயம் தாயின் கர்ப்பத் திலிருந்த ப்ரஹ்லாதனாகிய நான் அவற்றைக்கேட்டுக் கொண்டிருந்தேன், அதுமுதல் எனக்கு பகவானிடம் தீவிர பக்தியும் நம்பிக்கையும் ஏற்பட்டது, அந்த ஸம்பவம் பகவானின் அருளால் இப்போதும் என் நினைவில் இருக்கிறது, தாயின் கர்ப்பதில் இருக்கும்போது நான் கேட்ட நல்லவிஷயங்களே என்னை நல்லவனாக மாற்றியது, என்கிறார் பக்த ப்ரஹ்லாத ஸ்வாமி,

உத்தரையின் கர்ப்பதிலிருந்த பரீக்ஷித்தை அஸ்வத்தாமாவின் ப்ருஹ்மா ஸ்த்ரத்திலிருந்து பகவான் தனது சக்ராயுதத்தால் ரக்ஷிக்க, கர்பத்திலிருந்த (பரீக்ஷித்) குழந்தை பகவானை ஸ்தோத்ரம் செய்ததாக ஸ்ரீ பாகவதம் கூறுகிறது,

தனது தாயார், தான் கருவுற்றிருக்கும்போது தினஸரி பஜனைப்பாடல்களை கேட்டுக் கொண்டிருந்ததால் தான், தனக்கும் தினஸரி (ரகுபதி ராகவ ராஜாராம்) பஜனை செய்ய வேண்டும் என்னும் எண்னம் தோன்றியதாக மஹாத்மா காந்தி தனது ஸத்ய சோதனையில் கூறுகிறார். இதைப்போல் பற்பல ஸம்பவங்கள்,

இதனால் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கும் கேட்கும் சக்தி, நினைக்கும் திறன் உண்டு என்பதையும் அதுவே அந்தக்குழந்தையை நல்லவனாகவோ தீயவனாகவோ உருவாக்குகிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம்,


தற்சமயம் நல்ல சப்தங்கள் காதில் விழுவதே அரிதாகி விட்டன, எங்கும் வாஹன இரைச்சல், டி.வி குக்கர் மிக்ஸி போன்ற யந்திரங்களின் சப்தங்கள், சண்டை சச்சரவுகளால் ஏற்படும் கொடுமையான சொற்கள், இப்படிப்பட்ட சப்தங்களிலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் தன்னை அப்புறப்படுத்திக்கொள்ள வேண்டும், இந்தக் கொடிய சப்தங்கள் தன்னை மட்டுமல்லாது தனது கருவில் வளரும் குழந்தையையும் பாதிக்கும் என்பதை உணர வேண்டும்,

தன் வயிற்றில் வளரும் குழந்தையை கருத்தில் கொண்டு உணவில் (பத்யமான) சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதைப் போல், செவிக்கு ஆஹாரமான சப்தங்களை கேட்பதிலும் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்,

கர்ப்பிணிப்பெண், தனக்குப்பிறக்கும் குழந்தை எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாளோ, கர்ப காலத்தில் அதற்குத்தக்க சூழ்நிலையில் அவள் வஸிக்க வேண்டும்,

குழந்தை ஸங்கீத மேதையாக உருவாக வேண்டும் என்று ஆசைப்பட்டால் அடிக்கடி சாஸ்த்ரீய ஸங்கீதத்தைப்பாடவோ அல்லது கேட்கவோ வேண்டும், வேத சப்தங்கள், இரைச்சலில்லாத நாமஸங்கீர்த்தனம், தர்மிஷ்டர்கள் மூலம் தர்ம ப்ரவசனங்கள், ஆகியவற்றை கேட்க வேண்டும் ,

கர்ப்பிணிப் பெண்கள் நமது கலாச்சாரத்துக்கும் சாஸ்திர ஸம்ப்ரதாயங்களுக்கும் உட்பட்ட சூழ்நிலையில் தன்னை இருத்திக்கொண்டு, கெட்ட சப்தங்களை விலக்கி நல்ல சப்தங்களை காதால் கேட்டுக்கொண்டு, தெய்வ நினைவோடு இருந்து கொண்டு, தெய்வ பக்தியுள்ள பெற்றோர் பெரியோர் ஆகியோர்களிடம் விநயமுள்ள புத்திசக்தி மேதா சக்தியுள்ளதேசபக்தியுள்ள தீர்காயுஸ்ஸான குழந்தைகளைப் பெற்று ஸுகமாக வாழ ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்.