Let a Vedic priest enter your home every month

Let a Vedic Priest Enter Your Home Every Month

Search This Blog

Thursday, August 12, 2010

ஆசிரியர் எண்ணங்கள் ஆகஸ்ட் 2010

ஆசிரியர் எண்ணங்கள் August 2010
ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நேர்வழிப்படுத்தி நன்மையை அடைவிப்பதே நமது வேதங்களின் நோக்கமாகும்,

உலகம் போற்றும் உத்தம உபநிஷத் தத்துவத்தை வேதம்தான் உணத்துகிறது,

பௌதிக தத்துவத்தை விக்ஞானிகளும் வியக்கும்படி விளக்குவது வேதம்தான்.

காமதேனுவைப்போலக் கருதும் அனைத்து பொருளையும் கைக்கு எட்டும்படி செய்யும் ஏராளமான கர்மாக்களை காட்டுவது வேதம்தான்,

கடவுளைக் கண்கொண்டு காண பக்திவழி காட்டுவது வேதங்களே.

இப்படிப்பட்ட அரிய பொக்கிஷமான வேதத்திற்காகவும், நாம் இதுவரையில் செய்த பாவத்தைப் போக்கிக் கொள்ளவும், நம்மை பரிசுத்தமாக்கும் காயத்ரீ மந்திரத்துக்காககவும் வருஷத்தில் ஒருநாள் ஒதுக்க வேண்டும், அந்த நாள்தான் உபாகர்மா (ஆவணி அவிட்டம்) செய்யப்படு நாள்.


அனாதியான நம் வேதம் நம் முன்னோர்களால் கற்றும் கற்பிக்கப்பட்டும் வந்தது. அதை நாம் இளமையிலேயே கற்றுள்ளோம், அது நம்மிடம் வந்து நாளானதால் பழமை என்ற தோஷம் உண்டாகிறது.ஸமையல் செய்த பொருட்ளை ஒரு ஜா(யா)மமானால் உபயோகிக்கக்கூடாது என்பதைப்போல் கற்ற வேதத்தையும் பழமையாகிவிட்டால் உபயோகிக்கக்கூடாது என தர்மசாஸ்திரம் கூறுகிறது,

ஏன்என்றால்? அதில் சில தோஷம் தோன்றுகிறது. சில நமக்கே புலப்படும். சிலவை அகக்கண்ணுள்ள முனிவர்களுக்கே தெரியும். ஊசிப் போனதை நம் நாக்கும், மூக்கும் ஏற்பதில்லை. துர்நாற்றம் என அதை உண்ண மறுக்கிறோம். அங்ஙனமே நம்மிடமுள்ள வேதத்திற்கு பழமை என்ற ஒரு தோஷம் ஏற்படுகிறது. அந்த தோஷம் நன்மை அடையாதபடி தடை செய்யும். அதை அகற்றவே உபாகர்மா என்ற ஆவணி அவிட்டம் செய்கிறோம்.


தேவபவித்ரம் எனக்கூறப்படும் வேதத்திற்கே தோஷம் உண்டாகுமா? என்ற ஸந்தேஹம் தோன்றும், நமது அனாசாரத்தால் நாம் வேதோக்த கர்மா செய்யாததால், நாம் தினஸரி ப்ரும்ம யக்ஞம் கூறாததால் அந்த வேதத்துக்கும் தோஷம் தோன்றலாம். அதனால் வேதத்திற்கு யாதொரு குறையுமில்லை. நமக்கு அருள்புரியும் வேதத்தின் சக்திதான் குறையும்.

வேதோக்தமாக, கும்பாபிஷேகம் செய்து பிரதிஷ்டை செய்த ஆலய மூர்த்திகளுக்கு சில அசுத்தம் ஏற்பட்டால்ஆலய மூர்த்திக்குத் தீட்டோ, அசுத்தமோ உண்டா? ஆனால் அந்த தெய்வ விக்ரஹங்களுக்கு அனுக்ரஹம் செய்யும் அருள் சக்தி குன்றும் என்பது போல், நமது ஸங்கத்தால் பரிசுத்தமான வேதமும் சிறிது தோஷமுள்ளதாக ஆகின்றது.

உயர்ந்த வஸ்த்துக்களும் மல மூத்ர ரத்த மஜ்ஜை நிறைந்த நம் உடலுட் சென்றவுடன் மலமாகிறதல்லவா, அதுபோல்

ஆதலால்தான் இயற்கையிலேயே பரிசுத்தமாயினும் நம்மாலும், காலத்தாலும் வேதம் தோஷமுள்ளதாக ஆகின்றது, ஆயுதங்கள் உபயோகிக்கப்படாவில் துருப்பிடிக்கும். அதைச்சாணை தீட்டவேண்டும், உபயோகமானாலும் கூறு மழுங்கும். அப்போதும் அதைச் சாணை தீட்டவேண்டும்.

ஸ்ரீ க்ருஷ்ணர் ஒருவருக்கே வேதம் இந்த தோஷமில்லாது இருக்கட்டும் என அவர் குரு ஸாந்தீபினிமஹர்ஷி அருள் புரிந்தார். அப்படியிருந்தும் தாம் செய்யாவிடில் பிறரும் செய்யார் என அஞ்சி, கண்ணனும் ராமரும் கூட உபாகர்மாவை சிரத்தையாகச் செய்தனர்.

வேதத்தை அத்யயனம் செய்தாலல்லவா இந்த தோஷம் தோன்றும்? வேதமே தெரியாதவர்கள் இதை ஏன் செய்ய வேண்டும்? என்று சிலருக்குத் தோன்றலாம்.

மூன்று வேதங்களிலிருந்தும் ஸாரமாக எடுக்கப்பட்டது மூன்று பாதமுள்ள காயத்ரீ. அது உபநயனத்தின் (பூணல்போடும்) போது நம் அனைவருக்கும் உபதேசிக்கப்பட்டுள்ளது. அந்த வேத பாகம் (காயத்ரீ மந்திரம்) தோஷமில்லாமல் இருக்கவாவது கட்டாயம் உபாகர்மாவை செய்ய வேண்டும்.

இந்த உபாகர்மா ப்ரும்ஹசாரி, க்ருஹஸ்தன், வானப்ரஸ்தன் என்ற மூன்று ஆஸ்ரமிகளாலும் செய்யத்தக்கது. துறவிகள் கூட வ்யாஸபூஜை என்ற முறையில் சிஷ்ய பரிவாரத்துடன் ஸ்ரீவேதவ்யாஸரை பூஜிக்கின்றனர்.

ஆகவே வேதமும், வித்யாப்யாஸமும் ஸம்பந்தமுள்ள கர்மா இந்த உபாகர்மா,ஆகவே உபாகர்மா அன்று ஒருநாளாவது வேதம், வேத அங்கங்களின் முதல் பதத்தையாவது குரு முகமாக உபதேசம் பெற்றுக்கொள்ளலாம்,

வேதங்களுக்கு வேதமந்திரங்களுக்கு நமக்கு ஸொந்தமான காயத்ரீ மந்திரத்துக்கும் சக்தியைத்தரும் உபாகர்மாஆவணி அவிட்டம்என்று கூறப்படுகிறது,

வருடத்துக்கு ஒரு நாள் செய்ய வேண்டிய இந்த நிகழ்ச்சியை நாம் சிறிது கவனத்துடன் சிரத்தையுடன் செய்ய வேண்டும், மற்ற மதத்தினர் வேதத்துக்காக ஒரு மாதம் முழுவதும் பகலில் உபவாஸம் இருந்து விரதம் அனுஷ்டிக்கிறார்கள், நாம் அன்று ஒரு நாளாவது நியமத்துடன் இருக்க வேண்டாமா? ,

அன்புடன் காண்டரிஷிகளுக்குச் செய்யும் ஹோமத்தில் நாம் அனைவரும் ஒன்று சேரலாமே? வேத வேதாந்தங்களை வ்யாஸ கலசத்தினருகே, அக்னி முன்னே ,ஆசார்யர் முகமாக உபதேசம் பெறலாமே? இந்த ஒரு நாளேனும் வேற்றுமையைவிட்டு, ஒற்றுமையுடன் நம் ஸமூகத்துடன் அளவளாவ இரண்டொரு மணி நேரம் அளிக்கலாமே? இதற்கு பகவான் அனுக்ரஹிக்கட்டும்,
Post a Comment