Let a Vedic priest enter your home every month

Let a Vedic Priest Enter Your Home Every Month

Search This Blog

Friday, September 28, 2012

Vaithikasri April 2012-ஆசிரியர் எண்ணங்கள்


நீர், நெருப்பு, மண், ஆகாசம், காற்று ஆகிய ஐந்தும் இவ்வுலகில்அனைத்து ஜீவராசிகளும் உயிர்வாழ மிக முக்கியமானவை, பஞ்ச பூதங்கள் எனப்படும் இவை ஐந்தும் கடவுளின் அருளால் மட்டுமே நமக்குக் கிடைப்பவை. இவற்றை இவ்வுலகிற்குக் கிடைக்கச் செய்வதில் மற்றவர்களைக் காட்டிலும் அந்தணர்களுக்கு மிக முக்கியமான பங்கு உள்ளது, ஒவ்வொரு நாளும் ஸூர்யன் உதிக்கும் மற்றும் மறையும் நேரங்களில் தோன்றும் ஸந்த்யா என்னும் தேவதையை, வந்தனம் என்னும் கர்மாவால், காயத்ரீ போன்ற மந்திரங்களை ஜபித்து உபாஸிக்கும் முறையே ஸந்த்யாவந்தனம் எனப்படும் , இதை அந்தணர்கள் மட்டுமின்றி, (உபநயனம் ஆன) அனைவரும் தவறாது செய்ய வேண்டும். அப்போதுதான் நீர் நெருப்பு ஆகாசம் காற்ற்று மண் ஆகிய பஞ்சபூதத்தின் சக்திகள் இவ்வுலகிற்குக் கிட்டும், பஞ்ச பூதங்களால் ஏற்படும் (இயற்கை) சீற்றங்கள் ஏற்படாமல் உயிரினங்கள் பாதுகாக்கப்படும், ஆகவேதான் நமது வேதங்களும் சாஸ்திரங்களும் உலக நன்மையைக்கருதி ஒவ்வொரு அந்தணரும் தவறாது காலை மற்றும் மாலை நேரங்களில் ஸந்த்யாவந்தனம் செய்ய வேண்டும் என்று கடமையாகவே கூறியுள்ளது, ஸந்த்யாவந்தனம் செய்ய வேண்டிய (ஸூர்யஉதய- ஸூர்யஅஸ்தமன) நேரம், செய்பவருக்கான (சாஸ்திரப்படி வேஷ்டி கட்டிக்கொள்ளுதல், ஸ்னானம் செய்தல் முதலான) கட்டுப்பாட்டுகள்.,செய்யும் வழிமுறைகள், செய்யப்படும் இடங்கள் ஆகியவற்றில் (நோயாளிகள்-சிறுவர்கள்-முதியோர் போன்றவர்களுக்கு) சில விதிவிலக்குகளை வழங்கிய சாஸ்திரம், ஸந்தியாவந்தனத்தைச் செய்யாமல் இருப்பதற்கு யாருக்கும் அனுமதியளிக்கவில்லை, மாறாக ஸந்த்யா ஹீன: அஶுசிர் நித்யம் அநர்ஹ: ஸர்வகர்மஸு என்பதாக ஸந்த்யாவந்தனம் செய்யாத அந்தணர், தீட்டுள்ளவரைப் போல் எப்போதும் அசுத்தமானவர் என்று கூறும் தர்மசாஸ்திரம், அதைவிடக்கடுமையாக, அப்படிப்பட்டவர் எந்த ஒரு செயலையும் செய்யத்தகுதியற்றவர் என்றும் பயமுறுத்துகிறது. அதாவது ஸந்த்யாவந்தனம் செய்யாதவர், தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும், மற்றவருக்காகவும், செய்கின்ற தெய்வ ஸம்பந்தப்பட்ட பூஜைகள் பாராயணங்கள் அபிஷேகம் ஆலய தரிசனம் போன்றவைகளும், இறந்த தனது பெற்றோருக்காகச்செய்யும் சிராத்தம் தர்ப்பணம் போன்றவையும் முழுமையான பலனைத்தராது என்கிறது சாஸ்திரம், இவ்வுலகில் த்ரேதாயுகத்தில் பகவானே ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியாக மனிதராகப் பிறந்து, ஒரு மனிதன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை, தானே வாழ்ந்தும் காட்டினார், ஸ்ரீ ராமநவமியைக் கொண்டாடும் நாம், ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை- ராமாயணத்தை-படிக்கும் போது, ஸ்ரீ ராமர் வைதிக தர்மங்களுக்கு குறிப்பாக ஸந்த்யாவந்தனத்திற்கு, தந்துள்ள முக்கியத்துவத்தைப் பார்க்கலாம். ஸ்ரீ ராமலக்ஷ்மணர்கள், காயத்ரீ மந்திரத்தை உலகிற்குத் தந்த விஸ்வாமித்ர மஹர்ஷியுடன் யாகத்தை பாதுகாக்கச் செல்லும் போது, ஸ்நாத்வா க்ருதோத3கௌ வீரௌ ஜேபது: பரம ஜபம் (பாலகாண்டம்-23) என்று, ஸரயூ நதிக்கரையில் தங்கி ஓய்வெடுத்து விட்டு, மறுநாள் காலையில் எழுந்து நதியில்ஸ்னானம் செய்து,அர்க்யம் தந்து உயர்வான (காய்த்ரீ) மந்திரத்தை ஜபம் செய்தார்கள் என்கிறார் வால்மீகி மஹர்ஷி,மேலும் யதா2ர்ஹம் அஜபன் ஸந்த்4யாம் ருஷயஸ்தே ஸமாஹிதா: என்பதாக, காட்டில் வஸிக்கும் அனைத்து மஹ்ர்ஷிகளும் ஸந்த்யோபாஸனம் செய்தார்களாம். அத்துடன் ஜனகரின் தேசத்திற்கு ஜானகியை கைபிடிப்பதற்காக விஸ்வாமித்ரருடன் செல்லும் ஸ்ரீ ராம லக்ஷ்மணர்கள், க்ருத்வா பூர்வாஹ்ணிகாம் கிரியாம் என்று, பகலில் முதன்முதலாகச் செய்யவேண்டிய (ஸந்த்யோபாஸனம் என்னும்) கிரியைகளைச் செய்தார்கள் என்றும் காண்கிறோம், அயோத்தியில் சக்கிரவர்த்தியாக ஆக்ஷி செய்த ஸமயத்திலும் பூர்வாம் ஸந்த்4யா முபாஸீனோ ஜஜாப யத மானஸ: என்பதாக, காலையில் செய்ய வேண்டிய ஸந்த்யோபாஸனத்தை முடித்த பின்னரே, அரச ஸபைக்குச் சென்று தன்னைக் காண வந்திருக்கும் மக்களைக்கண்டார் என்கிறார் வால்மீகி மஹர்ஷி. ஸீதை மற்றும் லக்ஷ்மணருடன் காட்டில் ஸஞ்சரிக்கும் ஸ்ரீ ராமர், அகஸ்தியரின் ஆஸ்ரமம் செல்லும் முன்பாக ஸூர்யன் அஸ்தமனமாவதை உணர்ந்து ஸந்த்யோபாஸனத்தை(சுறுக்காமல்) முறையாக செய்தார் என்பதை ராமஶ்ச அஸ்தம் க3த: ஸந்த்4யா காலோப்4யவர்த்த, உபாஸ்ய பச்சிமாம் ஸந்த்4யாம் ஸஹ ப்ராப்ய யதா2விதி4 என்று ஆரண்யகாண்டம் தெரிவிக்கிறது.மனைவியை (ஸீதையை)ப் பிரிந்து தனிமையில் வருந்தும் போதும், ராவணணுடன் யுத்தம் செய்யும் ஸமயத்திலும் கூட ராமர் ஸந்த்யாவந்தனத்தை விட்டு விடவில்லை என்பதை ஆங்காங்கே தவறாது தெரிவிக்கிறார் வால்மீகி மஹர்ஷி. தர்மங்களுக்குள் சிறந்ததான-வேத விஹிதமான- ஸந்த்யோபாஸனம் என்னும் தர்மத்தை தவறாது செய்ததால்தான் ஸ்ரீராமரை ராமோ விக்4ரஹவான் த4ர்ம: என்பதாக தர்மத்தின் வடிவமே ஸ்ரீ ராமர் என்று கூறுகிறோம், ஸந்த்யாவந்தனம் அந்தணரின் கடமை என்பதால், ஸமயம் கிடைக்கும் போது செய்தால் போதுமே என்று நினைக்கக் கூடாது, ஸந்த்யோபாஸனத்தால் பஞ்ச பூதங்களின் சக்தி இவ்வுலகத்திற்கு ஸரியாக காலத்தில் கிடைக்கிறது என்பதால் இவ்வுலக (மக்களின்) நன்மையில் விருப்பமுள்ளவர்கள், மற்ற செயல்களைக் காட்டிலும் ஸந்த்யோபாஸனத்திற்கு முக்கியத்துவம் தந்து, ஒவ்வொரு நாளும் காலை மாலை நேரங்களில் ஸந்த்யோபாஸனம் செய்ய முயற்சிக்க வேண்டும், ஒவ்வொருவரும், தனக்கு ஏற்படும் ஆபத்தான காலங்களில் அவற்றிலிருந்து விடுபட, மந்திரஜபம் ஹோமம் பாராயணம் கே்ஷத்ராடனம் நாம ஸங்கீர்த்தனம் என்று பலவாறாக ஈடுபடுகிறார்கள், ஆனால் அதற்கு முன்பாக, ந கா3யத்ர்யா: பரோ மந்த்ர: என்பதாக காயத்ரீ மஹா மந்திரத்துக்கு மேலான மந்திரம் ஈரேழு புவனத்திலும் இல்லை என்பதால், ஸந்த்யோபாஸனம் செய்துவிட்டு, அதாவது முதன்முதலாக பலர்ர் முன்னிலையில் சிறு வயதில் தனக்கு (ப்ருஹ்ம) உபதேசம் செய்யப்பட்ட காயத்ரீ மஹா மந்திரத்தை ஜபம் செய்து விட்டுச் செய்தால் பூஜை ஜபம் பாராயணம் போன்றவைகள் முழுமையான பலனை விரைவாகத்தரும், தேவையான ஸமயத்திலெல்லாம் நமக்காக பால் சுறக்கும் காமதேனு (பசு)வைப் போல் இருக்கும் காயத்ரீ மந்திரம், நமது அனைத்துத் தேவைகளையும், ஏன்! இந்த தேசத்தின் தேவைகளைக் கூட, நிறைவேற்றும் ஆற்றலுடையது, நோய் வறுமை கடன் ஆபத்துகள் போன்றவற்றை விலக்கி, ஆயுள், செல்வம், புத்தி வளர்ச்சி, வெற்றி,லாபம்,ஆகிய அனைத்தையும், ஸந்த்யா வந்தனத்தை- காயத்ரீ ஜபத்தை-முறையாகச் செய்வதால் நாம் அடைய முடியும். உரியகாலத்தில் ஸந்த்யோபாஸனம் செய்பவர்கள் இருக்கும் கிராமத்தில்- நகரத்தில்- தேசத்தில்- நீராலோ (ஜலக்கஷ்டம்-வெள்ளம்), நெருப்பாலோ, ஆகாசத்தினாலோ (வான் வெளி ஆபத்துகள்), காற்றாலோ (புயல்), மண்ணாலோ (பூகம்பம்), எந்த ஆபத்தும் ஒரு போதும் ஏற்படாது. என்றும், ஆகவே ஸந்த்யா வந்தனம் செய்யாத அந்தணர் (தேசத்தை பாதுகாக்கத் தவறிய) குற்றம் புரிந்தவர் என்றும், அவரை அந்த தேச அரசன் (தேச த்ரோஹ குற்றத்திற்காக) தண்டிக்க வேண்டும் என்றும் கூறுகிறது மனுஸ்ம்ருதி. (அந்தணர்களின் நல்ல காலத்தால் இந்த ஷரத்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை, தற்போதைய ஆக்ஷியாளர்களும் இதை சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் நினைக்கவில்லை), அந்தணரல்லாத மற்றவர்கள்அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைக:ளை ஓரளவாவது செய்துகொண்டு வருகிறார்கள், அந்தணர்கள் மட்டும் தான், தனது கடமைகளை, (அதனால் கிட்டும் பயன்களை ஸரிவரப்புரிந்து கொள்ளாததால்) செய்யாமல் விட்டு விடுகிறார்கள் என்பது சிலரின் கருத்து. உலகில் காலத்தில் மழை பெய்யவும், பூகம்பம் ஸுனாமி, வெள்ளம் போன்ற ஆபத்துகள் வராமல் பாதுக்காக்கவும், வேத சாஸ்திரங்களால் தவறாது செய்ய வேண்டும் என்று விதிக்கப்பட்ட ஸந்த்யாவந்தனம் என்னும் கர்மாவை, ஒவ்வொரு அந்தணரும் ஒவ்வொரு நாளும் செய்ய முயற்சித்து, அதில் வெற்றி யடையவும், அதன் மூலம் உலகில் வாழும் மனிதன் மிருகம் பறவைகள் செடி கொடிகள் போன்ற அனைத்து உயிர்களுக்கும் நன்மைகள் கிடைக்கவும் ஸ்ரீ பகவான் நமக்கு அனுக்ரஹிக்கட்டும்.

No comments: