Let a Vedic priest enter your home every month

Let a Vedic Priest Enter Your Home Every Month

Search This Blog

Thursday, May 22, 2008

வைதிகஸ்ரீ ஆசிரியர் எண்ணங்கள் 1 Jan 2008

யதோ தர்மஸ் ததோ ஜய: எங்கு தர்மம் இருக்குமோ அங்கு வெற்றி நிச்சயம் என்பது ஸ்ரீக்ருஷ்ணரின் வாக்கியம். தர்மம் தலைகாக்கும். தர்மோ ரக்ஷதி ரக்ஷித: போன்றவைகளும் இதை உணர்த்தும் வாக்கியங்கள்தான். தஸ்மாத் ஸ்திரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதௌ, ஹே அர்ஜுனா? மனிதன் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பதில் சாஸ்திரம்தான் ப்ரமாணம் என்கிறார் கீதாசார்யர்.

ஐஹிக (இவ்வுலக) ஆமுஷ்மிக (மேலுலக) ஸுகத்தைப் பெற வேண்டுமானால் வேத சாஸ்திரங்களில் கூறியவாறு தர்மமான வழியில் செயல்பட வேண்டுமே தவிர, மனம் போன போக்கில்செயல்படக்கூடாது என்பதே இதன் பொருள்.

இவ்வாறு தார்மீகமான வழியில் செல்லும்செல்ல நினைக்கும்நாம், எப்போதும் நல்லவராக தார்மீகராக வாழவேண்டும் என்பதுடன், ஸுயநலமின்றி நம்மைச் சேர்ந்தவருக்கும் தர்மங்களை உணர்த்தி அவர்களையும் நம்முடன் நல்வழியில் அழைத்துச் செல்ல முயற்சிக்க வேண்டும். நம்மை நம்பியுள்ளவர்களுக்கு நாம் செய்யும் பேருதவி இதுதான்,

தற்காலத்தில் கலியின் சேஷ்டையால்ஆங்காங்கே சாஸ்திரங்கள் மீறப்படுகின்றன. கலாச்சாரம் மதிக்கப்படுவதில்லை. முன்னோர்கள் அனுஸரித்த ஸம்ப்ரதாயங்கள் தாண்டப்படுகின்றன. தர்மம் தெரிந்தவர்கள் குடும்பத்திலுள்ள பெரியோர்கள் தைரியமாக (தவறை) எடுத்துக்கூறுவதில்லை.

இதனால் தர்மத்தை மீறுபவர்களுக்கு மட்டும்தான் பாபம் என்பதில்லை, அதர்மத்தை ஆதரிப்பவர்களுக்கும், அதற்கு உடன்படுபவர்களுக்கும், ஏன்! அதைத் தவறு என்று சொல்லாதவர்களுக்கும் கூட பாபமும், அதன் பலனான துக்கமும் உண்டு என்று பயமுறுத்துகிறது சாஸ்திரம்,

ஆகவே மற்றவர்களை திருத்த நாம் யார்? என்று நினைத்து ஒதுங்கக்கூடாது. நமது உறவினர்களின் நன்மையை அவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். அவர்கள் நமது உயர்வான நோக்கத்தைப் புரிந்துகொள்ளா விட்டாலும் பரவாயில்லை,

நாம் தர்மத்தை (சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள ஸரி தவறு என்னும் செயல்களை) தயங்காமல் அவர்களுக்கு எடுத்துரைக்கவேண்டும். இதுதானே அவர்களுக்கு நாம் செய்யும் பேருதவி,

ஏதோ பழங்கதை பேசுகிறீர்கள், சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நாமும் மாற வேண்டாமா? என்கிறார்கள் சிலர், சூழ்நிலை மாறலாம் மனிதன் மாறலாம், ஏன் இயற்கை கூட மாறலாம், எக்காலத்திலும் தர்மமும் அதைக்கூறும் சாஸ்திரமும் மாறாது, மாற்றவும் இயலாது,

காலம் காலமாக நம் முன்னோர்கள் கடைபிடித்த சாஸ்திரங்களுக்குக் கட்டுப்படுவதுதான் தர்மம். ஆகவே எக்காலத்திலும் நன்மையைத்தரும் தர்மத்திலிருந்து பெரியோர்கள் ஒருபோதும் விலகக்கூடாது. தர்மத்தை மீறி நடப்பவர்களை நேர்வழிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

நாகரீகம் என்னும் பெயரில் தற்சமயம் நடைபெறும் அத்துமீறுதல் / தர்மம் மீறுதலை அனுமதிக்கக்கூடாது.எனது நெருங்கிய உறவினர் வீட்டுக் கல்யானம் சாஸ்திரத்தை மீறி தவறான முறையில் நடைபெறுகிறது. நான் என்ன செய்வேன்? நான் சாஸ்திரம் சொன்னால் என்னை அவமதிக்கிறார்கள் என்கிறார்கள் சிலர்.

உலகம் முழுவதும் நம்மால் திருத்த இயலாது. ஆனால் நம்மைச் சூழ்ந்துள்ள நம்மை நம்பியுள்ளவர்களுக்காவது நாம் எடுத்துரைக்கலாமல்லவா? அல்லது இது தவறு என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொண்டு நாம் மட்டுமாவது அந்த பாபத்திலிருந்து விடுபடலாமல்லவா!

ஸ்ரீ ராமாயணத்தில் தனது உடன் பிறந்த ராவணன் தர்மத்தினை மீறிய போது இலங்கையில் ஸபையில் தைரியமாக தர்மம் பேசினார் விபீஷணாழ்வார். அதனால் அவருக்கு ராஜ்யமும் புகழும் கிட்டியது, தன்னைப் பெற்ற தாய் கைகேயி தர்மத்தை மீறி நடந்த போது தர்மத்தை மீறியதற்காக அவளிடம் கோபித்து அவளுக்கு தர்மத்தைக் கூறினார் பரதஸ்வாமி.

தனது தந்தையே ஆனாலும் ஹிரண்யகசிபுவின் அதர்மமான வார்த்தைகளை ப்ரஹ்லாத ஸ்வாமி செயல்படுத்த வில்லை, மேற்கூறிய மஹான்களை நாம் மனதில் நினைத்துக்கொண்டு மற்றவருக்கு நன்மை செய்வோம் என்னும் உயர்ந்த எண்ணத்துடன் (தனக்கு அவமானம் நஷ்டம் ஏற்பட்டாலும் பாதகமில்லை என்று பொருத்துக்கொண்டு) மற்றவர்கள் தர்மத்தை மீறும் ஸமயத்தில் இது அதர்மம் இது தவறு என்று தைரியமாக எடுத்துரைக்க வேண்டும்,

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, இவ்வாறு நாம் கூறும்போது கூடியவரை மற்றவர் மனதை துன்புறுத்தாமலும், கடுமையான சொற்களை ப்ரயோகிக்காமலும், மிருதுவான வார்த்தையில், தனிமையில், தகுந்த ஆதாரத்துடன், அதர்மத்தை சுட்டிக்காட்ட வேண்டும்,

நமது சொல்லை கேட்பதும் கேட்காததும் அவரவர் புண்ய பாபத்தையும் பாக்யத்தையும் பொறுத்தது, ஆனால் நடக்கும் தவறை எடுத்துச்சொல்ல வேண்டியது நம் கடமை,

மேலும் அவர்கள் பின்நாளில் (அதர்ம பலன் ஏற்பட்டவுடன்) அடடா! நீங்கள் அப்போதே சொல்லி தடுத்திருக்கலாமே என்று நம்மிடம் வருத்தப்படக்கூடாது,

ஆகவே மற்றவருக்கு தர்மத்தை தைரியமாக எடுத்துச்சொல்லும் தைரியத்தை நமக்கும், அவ்வாறு நாம் சொல்லும்போது அதைக்கேட்டு நடக்க வேண்டும் எண்ணும் எண்ணத்தை மற்றவர்களுக்கும் தந்து ஸ்ரீபகவான் ரக்ஷிக்கட்டும்.

No comments: